search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
    X
    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

    இந்திய பொருளாதாரத்தில் மந்தநிலை இல்லை - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்

    இந்திய பொருளாதாரத்தில் மந்தநிலை இல்லை என்று நேற்று மாநிலங்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் நேற்று இந்திய பொருளாதார நிலை பற்றிய விவாதத்துக்கு பதில் அளித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    நாட்டின் நலன் கருதியே ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. வளர்ச்சி வேண்டுமானால் குறைந்திருக்கலாம், ஆனால் பொருளாதாரத்தில் இதுவரை மந்தநிலை இல்லை, இனி எப்போதும் ஏற்படாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 5 ஆண்டுகால ஆட்சியில் இருந்ததைவிட கடந்த பா.ஜனதா ஆட்சியில் பணவீக்கம் குறிப்பிட்ட இலக்கைவிட குறைவாகவே உள்ளது, பொருளாதார நிலையும் சிறப்பாகவே உள்ளது.

    இந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி குறைவாக இருந்தது. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், கார் உற்பத்தியாளர்கள், வீடுகள் விற்பனை மற்றும் கனரக தொழிற்சாலைகள் ஆகியவைகளால் இந்த நெருக்கடி உருவானது. ஏப்ரல்-ஜூன் மாதத்தில் இந்திய பொருளாதாரம் 5 சதவீதமாக இருந்தது. 2013-ல் இருந்து இது மிகவும் மெதுவான ஆண்டு வளர்ச்சி. தொடர்ந்து 6 காலாண்டுகளுக்கு மெதுவான வளர்ச்சியே இருந்தது.

    இது இருந்தபோதிலும் சமீபத்தில் நிதித்துறை மூலம் கம்பெனி வரிகள் குறைப்பு உள்பட அரசு வருமானத்தை தூண்டும் வகையில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வங்கிகளால் வழங்கப்பட்ட மோசமான கடன்கள் மற்றும் திரும்ப செலுத்தப்படாத கடன்கள் ஆகியவற்றால் கடந்த 2 நிதி ஆண்டுகளாக உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் சரிந்துள்ளது.

    வங்கிகள் மறுமூலதனம் மற்றும் திவால் நடவடிக்கைகள் சீர்திருத்தம் ஆகியவை இப்போது பலன் கொடுக்க தொடங்கி உள்ளன. இந்த நிதி ஆண்டுக்கான ரூ.6.63 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வருவாய் இலக்கில் ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில் ரூ.3.26 லட்சம் கோடி கிடைத்துள்ளது. மாத வாரியாக ஜி.எஸ்.டி. வசூல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

    ஏப்ரல்-அக்டோபர் மாதத்தில் நேரடி வரி வசூல் ரூ.6.86 லட்சம் கோடி என்பதும் 4.8 சதவீத வளர்ச்சி ஆகும். நேரடி வரிகள் - ஜி.டி.பி. விகிதம் 2014-15-ல் 5.5 சதவீதமாக இருந்தது 2018-19-ல் 5.98 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    பட்ஜெட்டுக்கு பிறகு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க 32 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையிலேயே இருக்கிறது.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சி எம்.பி.க்கள், பொருளாதாரம் சந்தித்துவரும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக நிதி மந்திரி தனது பட்ஜெட் உரையையே வாசிக்கிறார் என்று கூறி வெளிநடப்பு செய்தனர்.
    Next Story
    ×