search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இ-சிகரெட்டுக்கு தடை
    X
    இ-சிகரெட்டுக்கு தடை

    இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது

    இ-சிகரெட்டுகள் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேறியது.
    புதுடெல்லி:

    சீனாவை சேர்ந்த ஹான் லிக் என்பவர் கடந்த 2008-ம் ஆண்டு Electronic Nicotine Delivery Systems (ENDS) எனப்படும் இ-சிகரெட்டை கண்டுபிடித்தார்.

    பார்ப்பதற்கு சிகரெட்டைப் போலவே இருக்கிற ஒரு மின்னணுக் கருவியான இதனுள்ளே நிகோடின் மற்றும் புரோபைலின் கிளைக்கால் திரவம் நிரப்பப்பட்ட குப்பி இருக்கும். இதைச் சூடுபடுத்தும் சிறு கருவியும் பேட்டரியும் இருக்கும்.  

    சிகரெட் புகைக்க நினைக்கும்போது, இதை வாயில் வைத்து உறிஞ்சினால் ஏற்படும் விசையால், பேட்டரி இயங்கும். அப்போது, நிகோடின் சூடேறி, புகை கிளம்பும்.

    புகைப்பவர் இதை உள்ளிழுக்க, புகையிலை சிகரெட்டைப் புகைப்பது போன்ற திருப்தியை ஏற்படுத்தும். இதில், நிகோடின் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதால், இது தீங்கற்றது என்று பலரும் எண்ணுகின்றனர்.

    இது சந்தைக்கு வந்த முதல் ஆண்டிலேயே 80 கோடி அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை ஆனதாக அமெரிக்க சிகரெட் நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்தது.

    மேலும், ‘இ-சிகரெட் எந்த வகையிலும் புற்றுநோயை ஏற்படுத்தாது. நெருப்பு இல்லை. சாம்பல் இல்லை. அதிக அளவில் புகையும் இல்லை. ஆரோக்கியத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத நவீன சிகரெட்’ என்று விளம்பரம் செய்கின்றனர். ஆனால், ‘இ-சிகரெட் விளம்பரம் உண்மையல்ல. உடலில் புற்றுநோயை உண்டாக்க நிகோடின் ஒன்றே போதும்.

    இ-சிகரெட்டின் மாதிரிகள்

    இ-சிகரெட் புகைத்து ஒருவர், சிகரெட் புகைக்கும் பழக்கத்தை விட்டுவிட்டார்  என்பதற்கான அறிவியல் ஆதாரமோ, மருத்துவப் புள்ளி விபரங்களோ எதுவுமில்லை’ என்கின்றனர் புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள்.

    நிகோடின் எந்த வகையில் உடலுக்குள் நுழைந்தாலும்  ஆபத்துதான். இது புற்றுநோய், இதயநோய், ரத்தநாள நோய்கள் உள்ளிட்ட அபாயங்களை  ஏற்படுத்தக்கூடியது. எனவே, இ-சிகரெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த  வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து வருகிறது.

    அதனால், சிங்கப்பூர், பிரேசில் போன்ற சில நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் வாசனையூட்டப்பட்ட இ-சிகெரெட் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

    எனினும், புகையிலை சிகரெட்டுக்கு மாற்று என்ற போர்வையில், இ-சிகரெட் புகைக்கும் பழக்கம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்தியா உள்ளிட்ட 182 நாடுகளில் படுவேகமாக பரவியுள்ளது.

    தற்போது, இந்தியாவின் முக்கிய நகரங்களில் இ-சிகரெட்டுகள் பலமடங்கு விற்பனையாகிவந்த நிலையில், நாடு முழுவதும் இ-சிகரெட் தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, விளம்பரம் மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது.

    இதைதொடர்ந்து,  இ-சிகரெட் தடை தொடர்பான அவசர சட்டத்தை 18-9-2019 அன்று மத்திய அரசு பிறப்பித்தது. இதை சட்டவடிவமாக மாற்றுவதற்கான மசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்துக்கு பின்னர் இன்று நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×