search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரத் பவார் மகள் சுப்ரியாவுடன் அஜித் பவார்
    X
    சரத் பவார் மகள் சுப்ரியாவுடன் அஜித் பவார்

    குடும்பத்தினர் உருக்கமான பேச்சால் முடிவை மாற்றிய அஜித்பவார்

    சரத்பவார் மனைவி, மகள், மருமகன் உள்பட குடும்பத்தினரின் உருக்கமான பேச்சால் அஜித்பவார் துணை முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்து கட்சிக்கு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
    மும்பை:

    மராட்டிய மாநில அரசியலில் மிகப்பெரிய பரபரப்பையும், குழப்பத்தையும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித்பவார் கடந்த சனிக்கிழமை ஏற்படுத்தினார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத்பவாருக்கு அடுத்த இடத்தில் அஜித்பவார் இருந்து வந்தார். சரத்பவாருக்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியை கட்டுப்படுத்துவதில் அவருக்கும், சரத்பவாரின் மகள் சுப்ரியாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்பட்டு வந்தது.

    இத்தகைய சூழ்நிலையில் கடந்த சனிக்கிழமை அவர் திடீரென பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது, தேசியவாத காங்கிரசில் உள்ள எல்லா தலைவர்களிடமும் ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி தொகுதியில் இருந்து 1 லட்சத்து 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று தொகுதி மக்களும் எதிர்பார்க்கவில்லை.

    கடந்த சனிக்கிழமை அதிகாலை அவர் துணை முதல்&மந்திரியாக பதவி ஏற்ற போது அவருக்கு ஆதரவாக 29 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. பிறகு அது 11 ஆக குறைந்தது. அதன் பிறகு நான்கே நான்கு எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே அவருடன் இருந்தனர்.

    அந்த 4 எம்.எல்.ஏ.க்களையும் அவர் தனி இடத்தில் தங்க வைத்து இருந்தார். கடந்த திங்கட்கிழமை அந்த நான்கு பேரும் சொல்லாமல் கொள்ளாமல் அஜித்பவாரிடம் இருந்து விலகி சரத்பவார் பக்கம் ஓடி விட்டனர். இதன் காரணமாக தன்னை ஆதரிக்க ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத நிலையில் அஜித்பவார் தனி மரம் ஆனார். அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது கூட புரியாத, தெரியாத நிலையில் அவர் தவிக்க நேரிட்டது. அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக குடும்பத்திலும் அவரது முடிவு பிளவை ஏற்படுத்தி விட்டதாக வருத்தங்கள் தோன்றின.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவாரை நீக்கி விட்டதாக சரத்பவார் அறிவித்து இருந்தார். ஆனால் அதற்கான நடவடிக்கைகளை அவர் எடுக்காமல் இருந்தார். இந்த நிலையில் அஜித்பவாரை மீண்டும் குடும்பத்துடன் இணைக்கும் பணிகளும் ரகசியமாக நடந்து வந்தன. சரத்பவாரின் அண்ணன் மகன்தான் அஜித்பவார். எனவே சரத்பவாரின் மனைவி பிரதீபா, மகள் சுப்ரியா, மருமகன் சதானந்த சுலே ஆகிய மூவரும் தொடர்ந்து அஜித்பவாருடன் பேசி வந்தனர். குறிப்பாக சரத்பவாரின் மனைவி பிரதீபா இடைவிடாமல் அஜித்ப வாரிடம் பேசியபடி இருந்தார்.

    ஒரு கட்டத்தில் பிரதீபாவின் உருக்கமான பேச்சு அஜித்பவாரின் மனதை கரைத்தது. தனி மரமாக நின்ற அவர் அரசியலிலும், குடும்பத்திலும் மிகப்பெரிய தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்தார். என்றாலும் எப்படி மீண்டும் குடும்ப உறுப்பினர்களை சந்திப்பது என்ற தயக்கம் அவரிடம் இருந்தது.

    அந்த தயக்கத்தை சரத்பவாரின் மனைவி பிரதீபா தனது உருக்கமான பேச்சுக்கள் மூலம் நிவர்த்தி செய்தார். பிரதீபா மீது எப்போதும் அஜித்பவார் மிகப்பெரிய மரியாதையை காட்டுபவர். பிரதீபா உத்தரவுகளை கடந்த காலங்களில் அப்படியே கடைபிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே சித்தியின் (பிரதீபா) உருக்கமான பேச்சை அஜித்பவாரால் மீறமுடியவில்லை. “துணை முதல்&மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு வீட்டுக்கு வா” என்று பிரதீபா உத்தரவிட்டதும் அஜித்பவார் அதை அப்படியே ஏற்று நேற்று மதியம் செயல்பட்டார்.

    முன்னதாக சரத்பவாரின் மகள் சுப்ரியாவும் தொடர்ந்து அஜித்பவாருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல்கள் அனுப்பியபடியே இருந்தார். குடும்பத்தை பிளவுப்படுத்தி விடாதீர்கள் என்று அவர் கண்ணீர் மல்க வாட்ஸ்அப் தகவல்கள் அனுப்பியது சமூக வலைதளங்களில் பரவி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

    அதுபோல சரத்பவாரின் பேரனும், எம்.எல்.ஏ.வுமான ரோகித் பவாரும் சமூக வலைதளங்கள் மூலம் அஜித்பவாருக்கு அழைப்பு விடுத்தப்படியே இருந்தார். குடும்ப உறுப்பினர்களின் இந்த பாசம் அஜித்பவாரின் மனதை உலுக்கி எடுத்து விட்டது. இந்த நிலையில் நேற்று காலை அஜித்பவாரை தெற்கு மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல்பட்டேல் மற்றும் சரத்பவாரின் மருமகன் சதானந்தசுலே இருவரும் சந்தித்து பேசினார்கள். அப்போது சரத்பவார் மருமகன் பேசியதை கேட்டு அஜித்பவார் கண்ணீர் விட்டார்.

    இதைத் தொடர்ந்து சரத்பவாரின் மனைவி பிரதீபாவும் அஜித்பவாரிடம் போனில் பேசினார். அதன் பிறகே அஜித்பவார் நேரடியாக பட்னாவிசை சந்தித்து தனது முடிவை மாற்றிக் கொண்டதாக தெரிவித்தார். பிறகு துணை முதல்&மந்திரி பதவியையும் ராஜினாமா செய்து குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    நேற்று மதியத்திற்கு பிறகு மாலை வரை அவரிடம் சரத்பவார் குடும்பத்தினர் தொடர்ந்து பேசியபடி இருந்தனர். சரத்பவாரை சந்திக்கும்படி கேட்டுக் கொண்டனர். இதையடுத்து நேற்று இரவு 9.20 மணிக்கு சரத்பவார் வீட்டுக்கு அஜித்பவார் சென்றார்.
    சரத்பவாரிடம் கண்ணீர் விட்டு அழுதார். பிறகு தவறான முடிவு எடுத்ததற்காக தன்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பு மிகவும் உணர்ச்சிமயமாக இருந்ததாக சரத்பவார் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    அஜித் பவார் - சரத் பவார்


    அஜித்பவாரை மன்னித்து சரத்பவார் ஏற்றுக் கொண்டதால் குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்பு முடிவுக்கு வந்தது. இன்று காலை தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் அஜித்பவாரும் சட்டசபைக்கு வந்தார். தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து அமர்ந்து இருந்தார்.

    பிறகு அவர் சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார். அவருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இனி முக்கியத்துவம் அளிக்கப்படுமா? என்பது தெரியவில்லை. ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், எம்.எல்.ஏ.க்களும் அஜித்பவாரை முன்பு போல மரியாதை அளித்து வரவேற்று கவுரவித்து உள்ளனர். அஜித்பவாரின் வருகை தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வலிமை சேர்க்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    என்றாலும் அஜித்பவாருக்கு இனி சரத்பவார் முக்கியத்துவம் கொடுப்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அஜித்பவாருக்கு பதில் சரத்பவாரின் மகள் சுப்ரியாவின் கை இனி கட்சியில் ஓங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×