search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு
    X
    சுப்ரீம் கோர்ட்டு

    மகாராஷ்டிரா அரசியலில் பா.ஜ.க.வை பின்வாங்க வைத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    மகாராஷ்டிரா அரசியலில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு ஆட்சி அமைப்பதில் இருந்து பா.ஜ.க.வை பின்வாங்க வைத்தது.
    புதுடெல்லி :

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளால் ஆட்சி அமைக்க இயலாத நிலையில், அங்கு 12-ந்தேதி ஜனாதிபதி ஆட்சி அமலானது.

    தேர்தலின்போது பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்திருந்த சிவசேனா, தேர்தலுக்கு பின்னர் முதல்-மந்திரி பதவி போட்டி, மந்திரிசபையில் 50 சதவீத இடம் ஆகிய பிரச்சினைகளால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது.

    அந்த கட்சி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து புதிய கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்க முயற்சித்தது. அதில் உடன்பாடு ஏற்பட்டு, உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு பதவி ஏற்கும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் 22-ந்தேதி இரவு அறிவித்தார்.

    ஆனால் அதிரடியாக இரவோடு இரவாக, 105 இடங்களைக் கொண்ட பாரதீய ஜனதா கட்சி, 54 இடங்களை பிடித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கட்சி தலைவரான அஜித்பவாருடன் சேர்ந்து, ஆட்சி அமைக்க கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியிடம் உரிமை கோரியதை தொடர்ந்து, ஜனாதிபதி ஆட்சி 23-ந்தேதி அதிகாலையில் ரத்து ஆனது.

    இதைத்தொடர்ந்து, கவர்னர் விடுத்த அழைப்பை ஏற்று பாரதீய ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். 30-ந்தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு கவர்னர் ‘கெடு’ விதித்தார்.

    கவர்னரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேவேந்திர பட்னாவிஸ் அரசு சட்டசபையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிடவேண்டும் என்றும் கோரி சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ வழக்கு தொடர்ந்தன.

    கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, இந்த வழக்கை அவசர வழக்காக மூத்த நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சய் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. முடிவில், ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தும், தேவேந்திர பட்னாவிஸ் புதிய அரசு அமைக்க அழைப்பு விடுத்தும் கவர்னர் எழுதிய கடிதங்களை திங்கட்கிழமை (நேற்றுமுன்தினம்) தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    தேவேந்திர பட்னாவிஸ்

    அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) காலை வழக்கு, மூத்த நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, கவர்னரின் கடிதங்களை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தாக்கல் செய்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட மூத்த நீதிபதி என்.வி.ரமணா அமர்வு, இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை (நேற்று) உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்தது.

    அதன்படி நேற்று காலை, மூத்த நீதிபதி என்.வி.ரமணா அமர்வு, “தேவேந்திர பட்னாவிஸ் அரசு இன்று (புதன்கிழமை) சட்டசபையை கூட்டி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்” என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

    உத்தரவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * நவம்பர் 27-ந்தேதி (இன்று) மகாராஷ்டிரா சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதை கவர்னர் உறுதி செய்ய வேண்டும்.

    * நம்பிக்கை வாக்கெடுப்புக்காக இடைக்கால சபாநாயகரை நியமிக்க வேண்டும்.

    * தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மாலை 5 மணிக்குள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதில் ரகசிய ஓட்டெடுப்பு கிடையாது.

    * சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வுகள், நேரலையாக ஒளிபரப்ப வேண்டும்.

    * வழக்கின் மீது மத்திய, மாநில அரசுகள் 8 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதப்படுத்தினால், அது குதிரை பேரத்துக்கு வழிநடத்துவதற்கு வாய்ப்பு உண்டு என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கருத்து தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில்தான் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜ.க.வின் அரசியல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. சிவசேனா கூட்டணி ஆட்சி ஏற்பட வழிவகை ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×