search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரத்பவார்
    X
    சரத்பவார்

    மகாராஷ்டிரா அரசியலில் இவர்தான் சாணக்கியர்களின் சாணக்கியர்...

    மகாராஷ்டிரா அரசியலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தான் சாணக்கியர்களின் சாணக்கியர் என அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    மகாராஷ்டிராவில் கடந்த வெள்ளிக்கிழமை ( நவம்பர் 22) இரவு காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக இரவோடு இரவாக நிலைமை தலைகீழாக மாறியது.
     
    தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகனும் கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவருமான அஜித் பவார் மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சியமைக்க தனது ஆதரவை தெரிவித்தார். 

    இதையடுத்து சனிக்கிழமை காலை 8 மணியளவில் பட்னாவிஸ் முதல் மந்திரியாகவும், அஜித் பவார் துணை முதல் மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

    அமித் ஷா

    இந்த சம்பவம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த நடவடிக்கைகள் பாஜக தலைவரும் மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா-வின் அரசியல் சதுரங்கத்தால் தான் நிறைவேறியது என சமூக வலைதளங்களில் பரவலான கருத்துக்கள் நிலவியது. 

    இதனால், இந்திய அரசியலின் சாணக்கியர் அமித் ஷா என்ற ஹேஷ்டேக் வேகமாக பரவியது.

    இதற்கிடையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சரத்பவார், ‘ பாஜக குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற இது ஒன்றும் கோவா இல்லை. இது மகாராஷ்டிரா. மேலும், பாஜகவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என அதிரடியாக கூறினார்.

    இதற்கிடையில், மகாராஷ்டிராவில் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை பலத்தை பாஜக மாநில சட்டசபையில் நாளை நிரூபிக்க வேண்டுமேன சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடியாக உத்தரவிட்டது. 

    சரத்பவார்

    இந்த உத்தரவு வெளியாகி சில மணி நேரங்களிலேயே முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் பகத் சிங் கோஷாரியாவிடம் வழங்கினார். 

    இதனால், மகாராஷ்டிரா அரசியலில் முதல் முறையாக ஒரு முதல் மந்திரி தான் பதவி ஏற்ற 80 மணி நேரத்திலேயே அந்த பதவியை விட்டு விலகிய மோசமான சாதனையை பட்னாவிஸ் படைத்துள்ளார்.

    இந்நிலையில் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி 4 நாட்களிலேயே கவிழ்க்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களில் ஒருவரான நவாப் மாலிக் கூறுகையில், ‘மகாராஷ்டிராவின் சாணக்கியரான தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவார் மற்ற சாணக்கியர்களை தோற்கடித்துள்ளார்’ என தெரிவித்தார்.
    Next Story
    ×