search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பாலக்காடு அருகே சேவை தொடங்கிய முதல்நாளே 108 ஆம்புலன்சில் ஆதிவாசி பெண்ணுக்கு பிரசவம்

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கிய முதல் நாளில் ஆதிவாசி பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடகஞ்சேரியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு நேற்று கேரளா அரசு சார்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.

    புதிய ஆம்புலன்ஸ் ஓட்டுனராக ஆசீப் இருந்தார். மருத்துவ டிக்னீசியனாக ஷில்பா மரியகோஷ் மற்றும் ஒரு ஆண் நர்சு நியமிக்கப்பட்டிருந்தனர். பஞ்சாயத்து அலுவலகத்தில் இதற்காக விழா நடந்தது.

    விழா முடிந்த அரை மணி நேரத்தில் அதே பகுதியில் உள்ள கல்படி ஆதிவாசி கிராமத்தில் இருந்து ஆதிவாசி தலைவர் மணிகண்டன் என்பவரிடம் இருந்து போன் வந்தது. அதில் எங்கள் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மனைவி பீனா (வயது 24) என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே வாருங்கள் என்று அழைத்தார்.

    அதன்படி ஆதிவாசி கிராமத்துக்கு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நிறைமாத கர்ப்பிணி பீனாவை ஏற்றிக்கொண்டு வடக்கஞ்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டனர். ஆனால் செல்லும் வழியில் பீனாவுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் ஆகும் நிலை ஏற்பட்டது.

    இதனையடுத்து ஆம்புலன்ஸ் சாலையோரம் நிறுத்தப்பட்டது. மருத்துவ டிக்னீசியன் ஷில்பா மரியகோஷ் மற்றும் ஆண் நர்சு இருவரும் பீனாவுக்கு பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்தில் பீனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

    பிறந்த குழந்தை எடை குறைவாக இருந்தது. பீனாவுக்கும் அதிக ரத்தபோக்கு ஏற்பட்டு மோசமான உடல் நிலையில் இருந்தார்.

    இதனையடுத்து நர்சு ஷில்பா மரியகோசின் அறிவுரைப்படி ஆம்புலன்ஸ் திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்குசென்றது. இதனையடுத்து தாய்- சேய் திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இருவரும் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    உரிய நேரத்தில் மருத்துவம் பார்த்ததால் தாயும், குழந்தையும் உயிர் பிழைத்தது ஆதிவாசி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் கூறினர்.
    Next Story
    ×