search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்ச்சைக்குள்ளான அயோத்தி நிலம்
    X
    சர்ச்சைக்குள்ளான அயோத்தி நிலம்

    அயோத்தி தீர்ப்புக்கு எதிராக முறையிட மாட்டோம்: உ.பி.சன்னி வாரியம் முடிவு

    அயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக முறையிடப் போவதில்லை என உத்தர பிரதேசம் மாநிலத்தின் சன்னி வாரியம் இன்று தெரிவித்துள்ளது.
    லக்னோ:

    நெடுங்காலமாக சர்ச்சையில் இருந்த அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் பிரச்சினைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம், அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது.

    மேலும், அங்கிருந்த மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது, மசூதி கட்ட வேறு இடத்தில் அரசு சார்பில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும் எனவும் உத்தரவிட்டது.  இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய  ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பு தீர்மானித்துள்ளது.

    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக உத்தர பிரதேசம் மாநிலத்தின் சன்னி வாரியம் அமைப்பின் உறுப்பினர்கள் கூட்டம் இன்று பிற்பகல் லக்னோ நகரில் நடைபெற்றது.

    இந்த வாரியத்தின் தலைவர் ஜாபர் பரூக்கி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள 9 பேரில் 8 பேர் கலந்துக் கொண்டனர். விரிவான விவாதம் மற்றும் ஆலோசனைக்கு பின்னர் அயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக முறையிட வேண்டாம் என 6 உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இரு உறுப்பினர்கள் மட்டும் வழக்கு தொடர வேண்டும் என வலியுறுத்தினர்.

    அப்துல் ரசாக் கான்

    எனினும், பெருபான்மையான உறுப்பினர்களின் முடிவு வழக்கு தொடர வேண்டாம் என்பதாகவே உள்ளது என இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அப்துல் ரசாக் கான் தெரிவித்தார்.

    அரசு அளிக்கவுள்ள 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்வது தொடர்பாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    Next Story
    ×