search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வது எப்படி? மும்பையில் இன்று இரவு பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை

    மகாராஷ்டிர மாநிலத்தில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வது குறித்து மும்பையில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
    மும்பை:

    மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை திடீர் திருப்பம் ஏற்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது. பாஜக ஆட்சியமைப்பதற்கு அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாஜக அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறி, எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துள்ளனர். நேற்று இரவு நட்சத்திர ஓட்டலில் அந்த எம்எல்ஏக்களின் அணிவகுப்பையும் நடத்தி தங்கள் பலத்தை காண்பித்தனர்.

    தேவேந்திர பட்னாவிஸ்

    எனவே, நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்படும் நிலை உள்ளது. அதற்கு முன்னதாக, பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், மும்பையில் இன்று இரவு 9 மணிக்கு பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

    பாஜகவின் உயர்மட்டக்குழு இன்று கூடியது. அப்போது, எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இரவு 9 மணிக்கு கர்வார் கிளப் ஓட்டலுக்கு வந்து ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டது என கட்சியின் மூத்த தலைவர் ராவ்சாகிப் தான்வே பாட்டீல் கூறினார்.

    Next Story
    ×