search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிந்து
    X
    போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிந்து

    சபரிமலை செல்ல முயற்சி: பிந்து-திருப்தி தேசாய்க்கு பக்தர்கள் எதிர்ப்பு

    சபரிமலை செல்வதற்காக கேரளா வந்துள்ள பெண்கள் உரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் மற்றும் பிந்து ஆகியோருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது.
    திருவனந்தபுரம்:

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்த ஆண்டு இளம்பெண்கள் சபரிமலைக்கு வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாட்டோம் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. நீதிமன்ற அனுமதியுடன் வரும் பெண்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பு தர முடியும், அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. இதையும் மீறி சபரிமலை செல்ல முயற்சித்த சில பெண்களை, கேரள போலீசார் தடுத்து, அரசின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பி அனுப்பினர்.

    இதற்கிடையே, புனேயை சேர்ந்த பெண் உரிமை இயக்கத்தை சேர்ந்த திருப்தி தேசாய் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்யப்போவதாக அறிவித்தார். சபரிமலை செல்ல மாநில அரசு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் விரைவில் கேரளா வருவேன் என்றும் கூறியிருந்தார்.

    திடீரென்று இன்று அதிகாலை 4.30 மணி அளவில் கேரள மாநிலம் கொச்சிக்கு விமானம் மூலம் வந்தார். அவருடன் 5 பெண்களும் வந்திருந்தனர்.

    விமான நிலையத்தில் அவர்களை கடந்த ஆண்டு சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்த பிந்து வரவேற்றார். அதன்பிறகு திருப்திதேசாய் உள்பட அனைவரும் கார் மூலம் கொச்சியில் உள்ள போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு சென்றனர்.

    திருப்திதேசாய்

    தன்னை யாரும் அடையாளம் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக திருப்திதேசாய் முகத்தை துணியால் மூடியிருந்தார்.

    சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்ய தனக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு திருப்தி தேசாய் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்து காத்திருந்தார்.

    இதுபற்றி திருப்தி தேசாய் கூறும்போது, சபரிமலை செல்ல விருப்பம் தெரிவித்து நான் மனு கொடுத்து உள்ளேன். எனக்கு அரசு பாதுகாப்பு தர வேண்டும். இல்லை என்றால் பாதுகாப்பு வழங்க முடியாது என்பதை எழுத்துப்பூர்வமாக தர வேண்டும் அதுவரை நான் இங்கிருந்து செல்லமாட்டேன் என்றார்.

    இதற்கிடையில் திருப்தி தேசாய், பிந்து உள்பட இளம்பெண்கள் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு வந்திருக்கும் தகவல் பரவியதும் அங்கு ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பை சேர்ந்தவர்களும் திரண்டனர்.

    அப்போது பிந்து போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். அவரைப் பார்த்ததும் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த மிளகாய் பொடி ஸ்பிரேயை எடுத்து பிந்துவின் முகத்தில் அடித்தார்.

    இதனால் பிந்துவும் ஆவேசமடைந்து எதிர்ப்பாளர்களுடன் காரசாரமான வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து சென்று பிந்துவை பாதுகாப்பாக போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

    இதற்கிடையில் அங்கு திரண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் நாமகோ‌ஷங்களை எழுப்பியபடி திருப்திதேசாய், பிந்துவுக்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    திருப்திதேசாய் ஏற்கனவே கடந்த ஆண்டும் சபரிமலை செல்வதற்காக கொச்சி வந்தார். அப்போது அவரை விமான நிலையத்தில் இருந்து வெளியே வரவிடாமல் தடுத்து ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பலமணிநேரம் காத்திருந்தும் அவரால் விமான நிலையத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. இதனால் திருப்தி தேசாய் அடுத்த ஆண்டு சபரிமலை வருவேன் என்று ஆவேசமாக கூறி விட்டு திரும்பிச் சென்றார்.

    அதேப்போல கடந்த ஆண்டு சபரிமலைக்கு செல்ல முயன்ற மாடல் அழகி ரெகானா பாத்திமாவை பக்தர்கள் தடுத்துநிறுத்தி கல் வீசியதால் அவரால் சபரிமலைக்கு செல்ல முடியவில்லை. இந்த ஆண்டு அவர் சபரிமலை செல்ல அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு கொடுத்தார். ஆனால் அவருக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    Next Story
    ×