search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரத்பவார்
    X
    சரத்பவார்

    அஜித்பவாருக்கு பின்னால் நான் இருப்பதாக கூறுவது தவறு: சரத்பவார்

    மகாராஷ்டிராவில் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்த விவகாரத்தில் அஜித்பவார் பின்னால் நான் இருப்பதாக கூறுவது தவறு என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.
    மும்பை :

    மகாராஷ்டிராவில் எதிர்பாராத திருப்பமாக கடந்த 23-ந் தேதி பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகனும், அக்கட்சியின் மூத்த தலைவருமான அஜித்பவார் துணை முதல்-மந்திரி ஆனார்.

    ஆனால் பாரதீய ஜனதாவுடன் கைகோர்த்தது அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உடனடியாக அறிவித்தார். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் இல்லை என்றும் கூறினார். ஆனாலும் அஜித்பவாரின் பின்னணியில் சரத்பவார் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், மராட்டியத்தின் முதலாவது முதல்-மந்திரி யஸ்வந்த்ராவ் சவானின் நினைவு நாளையொட்டி சத்தாரா மாவட்டம் கராடில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று சரத்பவார் அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் சரத்பவார் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் முடிவில் ஒருமித்த கருத்துடன் இருந்தன. மூன்று கட்சிகளின் மூத்த தலைவர்கள் கூட்டத்தில் அஜித்பவாரும் கலந்து கொண்டார்.

    அஜித்பவார்

    அதன்பின்னர் அவர் என்ன முடிவு எடுத்தாரோ அது அவரது தனிப்பட்ட முடிவு. பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது தேசியவாத காங்கிரசின் முடிவு அல்ல. அதை நாங்கள் அங்கீகரிக்கவும் இல்லை. இந்த விவகாரத்தில் அஜித்பவாரின் பின்னணியில் நான் இருப்பதாக சொல்வது தவறானது. இதில் எனக்கு தொடர்பு இருக்கிறது என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அப்படி நான் சம்பந்தப்பட்டிருந்தால், நான் என் சகாக்களிடம் சொல்லியிருப்பேன்.

    இதுபோன்ற முடிவை தனிப்பட்ட முறையில் எடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. எந்த கருத்து வேறுபாடு இருந்து இருந்தாலும் அதை கட்சி கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.

    பாரதீய ஜனதா மற்ற கட்சிகளிடம் இருந்து வேறுபட்டது என்று கூறுவது வழக்கம். அவர்களது தற்போதைய செயலுக்கு பிறகு, அவர்களின் வேறுபாடு என்ன என்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. எனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற பல அனுபவங்களை நான் கண்டு இருக்கிறேன். சிரமங்கள் எது வந்தாலும் அவை தற்காலிகமானவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் அஜித் பவார் அழுத்தத்திற்கு உள்ளானாரா? என்று கேட்டதற்கு, பதிலளித்த சரத்பவார், “அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது" என்றார்.

    பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்-மந்திரி ஆனதால் அஜித்பவார் தேசியவாத காங்கிரசில் இருந்து நீக்கப் படுவாரா? என்ற கேள்விக்கு கட்சி மட்டத்தில் அதுபற்றி முடிவு எடுக்கப்படும் என்று அவர் பதிலளித்தார்.

    Next Story
    ×