search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற பெண் பணியாளர்கள்
    X
    வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற பெண் பணியாளர்கள்

    52 நாட்களாக நீடித்த தெலுங்கானா அரசு பஸ் ஊழியர்களின் போராட்டம் வாபஸ்

    தெலுங்கானா மாநிலத்தில் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி 52 நாட்களாக நீடித்த அரசு பஸ் ஊழியர்களின் போராட்டம் இன்று மாலை வாபஸ் பெறப்பட்டது.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு போக்குவரத்துக் கழகத்தை அரசு ஏற்று நடத்த வேண்டியும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

    அரசு விதித்த காலக்கெடுவுக்குள் பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் பஸ் ஊழியர்களை தாங்களாகவே பதவி விலகியதாக அரசு எடுத்துக்கொள்ளும் என முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடியாக அறிவித்தார்.
     
    ஆனாலும், ஊழியர்கள் பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்காலிக ஊழியர்கள், மாற்று நபர்களை வைத்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து போராட்டம் தீவிரமடைந்தது.

    போராட்டத்தால் முடங்கிய பஸ்கள்

    அரசு பேருந்து பணிமனைகள் மற்றும் பல்வேறு இடங்களில் போராட்டம், மறியல், ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதற்கிடையே, சுமார் 5 ஆயிரம் வழித்தடங்களை தனியாருக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாக மாநில அரசு அறிவித்தது.
     
    இந்நிலையில், கடந்த 52 நாட்களாக நடைபெற்ற இந்த  வேலைநிறுத்தப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.

    இந்த முடிவு தொடர்பாக ஐதராபாத் நகரில் செய்தியார்களுக்கு பேட்டி அளித்த போராட்டக் கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் அஷ்வதாமா ரெட்டி, இன்று பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்க அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசித்த பின்னர் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்தார்.

    வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் அவரவர் சார்ந்திருக்கும் பணிமனைகளில் இருந்து நாளை பணிகளை தொடங்குமாறு கேட்டுக்கொண்ட அவர், இத்தனை நாட்களாக ஒப்பந்தப் பணியாளர்களாக தற்காலிகமாக வேலை செய்த டிரைவர்கள், கண்டக்டர்கள் இனி ஒதுங்கி இருக்க வேண்டும் என்றும் அஷ்வதாமா ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×