search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை சன்னிதானத்தில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்.
    X
    சபரிமலை சன்னிதானத்தில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்.

    சபரிமலை கோவிலில் படிபூஜையால், 3 மணிநேரம் காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள்

    சபரிமலை கோவில் இந்த ஆண்டு படிபூஜை நடத்தப்படுவதால் ஐயப்ப பக்தர்கள் 3 மணிநேரம் வரை காத்து இருக்கிறார்கள்.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது.

    இதனால் முதல் நாளில் இருந்தே ஐயப்ப பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் அலைமோதுகிறது. இந்த ஆண்டு சபரிமலைக்கு வரும் இளம்பெண்களை போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்புவதால் சபரிமலையில் கடந்த ஆண்டைப்போல பதட்டம் எதுவும் ஏற்படவில்லை.

    இதனால் ஐயப்ப பக்தர்கள் அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அவர்கள் பல மணிநேரம் வரிசையில் காத்திருந்த பிறகே சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய முடிகிறது.

    சபரிமலை கோவிலில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் 18-ம் படி பூஜையும் ஒன்று. படிபூஜை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்ற ஐதீகத்தால் படிபூஜை செய்ய பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த பூஜை செய்வதற்கு பக்தர்கள் கட்டணமாக ரூ.72 ஆயிரம் செலுத்த வேண்டும். 2036-ம் ஆண்டு வரை படிபூஜைக்கு பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர்.

    படிபூஜையின் போது ஐயப்ப பக்தர்கள் 18-ம் படி ஏறிச்செல்ல முடியாது. பூஜை முடியும் வரை அவர்கள் 18-ம் படியின் கீழேதான் காத்திருக்க வேண்டும். இதனால் ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு கூட்டம் அதிகமாக இருக்கும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக் காலங்களில் படிபூஜை நடத்தப்படுவது இல்லை. மாதாந்திர பூஜை நாட்களில் மட்டுமே படிபூஜை நடைபெறும்.

    ஆனால் கடந்த ஆண்டு மழை போன்ற இயற்கை சீற்றம் காரணமாக மாதாந்திர பூஜை காலங்களில் படிபூஜை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தற்போது மண்டல பூஜையின் போது படிபூஜை நடத்தப்பட்டு வருகிறது.

    மண்டல பூஜையின் போது 18-ம் படி ஏற முடியாமல் காத்திருப்பது பல ஐயப்ப பக்தர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. இதுபற்றி ஐயப்ப பக்தர்கள் கூறியதாவது:-

    மாளிகைபுரத்தம்மன் கோவிலில் மஞ்சள் தேங்காய் உருட்டி நேர்ச்சை நிறைவேற்றிய சிறுமிகள்.


    மண்டல பூஜை காலத்தில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக படிபூஜை நடத்தப்படுவது இல்லை. ஆனால் இந்த ஆண்டு படிபூஜை நடத்தப்படுவதால் சாமி தரிசனம் செய்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. படிபூஜைக்காக 3 மணிநேரம் வரை பக்தர்களை காக்க வைக்கிறார்கள்.

    அதிக கட்டணம் செலுத்தி செய்யப்படும் படிபூஜையை வசதிபடைத்தவர்களே செய்கிறார்கள். ஆனால் சபரிமலை கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் ஏழைகள் ஆவர். எனவே அவர்களை கருத்தில் கொண்டு படிபூஜையை மீண்டும் மாதாந்திர பூஜை காலங்களிலேயே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சபரிமலையில் உள்ள மாளிகைபுரத்தம்மன் கோவில் புதிய மேல் சாந்தியாக பரமேஸ்வரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். சபரிமலை கோவில் நடை திறந்த கடந்த 16-ந்தேதி அவர் பதவியேற்க இருந்தார். ஆனால் அவரது உறவினர் ஒருவர் மரணமடைந்ததால் பதவியேற்பு தள்ளிவைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று பரமேஸ்வரன் நம்பூதிரி புதிய மேல்சாந்தி பதவியை ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு மந்திரங்கள் உபதேசித்தார். இன்று முதல் அங்கு நடைபெறும் அனைத்து பூஜைகளையும் பரமேஸ்வரன் நம்பூதிரி நடத்துவார்.

    Next Story
    ×