search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரத் பவார்
    X
    சரத் பவார்

    அஜித் பவாரின் முடிவுக்கு சரத் பவார் ஆதரவு இல்லை -தேசியவாத காங்கிரஸ் உடைய வாய்ப்பு

    மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைத்துள்ள அஜித் பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் ஆதரவு அளிக்கவில்லை. எனவே, கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக, பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றுள்ளது. முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவாரும் பதவியேற்றுள்ளனர். இதனால் கடந்த 10 நாட்களாக அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்தது.

    சிவசேனா தலைமையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை முதல்-மந்திரியாக ஏற்க கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று இரவு தெரிவித்திருந்தார். ஆனால், ஒரே இரவில் நிலைமை தலைகீழாக மாறியது. 

    பாஜகவுக்கு ஆதரவு அளித்தது குறித்து அஜித் பவார் கூறுகையில், ‘தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதல் இன்று வரை எந்தவொரு கட்சியாலும் அரசாங்கத்தை உருவாக்க முடியவில்லை. 

    அஜித் பவார்

    மகாராஷ்டிரா மாநிலம் விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறது. நிலையான அரசு அமைந்தால்தான், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். எனவே நாங்கள் ஒரு நிலையான அரசாங்கத்தை உருவாக்க முடிவு செய்து, பாஜகவுடன் இணைந்துள்ளோம்’ என்றார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரின் ஒப்புதல் இல்லாமல், அஜித் பவார் ஆலோசனை நடத்தி பாஜகவுக்கு ஆதரவு அளித்திருக்க முடியாது என்று தகவல் வெளியானது. ஆனால், இதனை சரத் பவார் மறுத்தள்ளார். 

    ‘பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைத்துள்ள அஜித் பவாரின் முடிவு அவரது தனிப்பட்ட  முடிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல. அஜித் பவாரின் இந்த முடிவை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை ஆமோதிக்கவும் இல்லை’ என்று சரத் பவார் கூறியுள்ளர்.

    இதனால் மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரின் ஒப்புதல் இல்லாமல் அஜித் பவார் தன்னிச்சையாக பாஜகவுக்கு ஆதரவு அளித்திருப்பதால் அக்கட்சியில் சலசலப்பு உருவாகி உள்ளது. இதே நிலை நீடிக்கும்பட்சத்தில், கட்சி உடையும் சூழல் உள்ளது. 
    Next Story
    ×