search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பியூஸ் கோயல்
    X
    பியூஸ் கோயல்

    ரெயில்வே தனியார் மயமாகிறதா? மத்திய அரசு பதில்

    ரெயில்வே தனியார் மயமாகிவிடும் என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் அதற்கு பதில் அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. நஷ்டத்தில் இயங்குகிற ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் ரெயில்வேயும் தனியார் மயமாகிவிடும் என்று பரவலாக பேசப்படுகிறது. இது பாராளுமன்ற மாநிலங்களவையிலும் எதிரொலித்தது.

    இதையொட்டி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் பதில் அளித்தார்.

    அப்போது அவர், “எங்களது நோக்கம், பயணிகளுக்கு சிறப்பான சேவைகளையும், நன்மைகளையும் அளிப்பதுதான். ரெயில்வேயை தனியார் மயமாக்குவது அல்ல. இந்திய ரெயில்வே, அரசின் சொத்தாக, இந்திய மக்களின் சொத்தாக எப்போதும் தொடரும்” என உறுதி அளித்தார்.

    அதே நேரத்தில் “பயணிகளுக்கு சிறப்பான வசதிகளை வழங்குவதற்காக வணிகம் மற்றும் ரெயிலில் பயணிக்கிறபோது கிடைக்கிற சேவைகளை தனியார் மூலம் பெறுகிறோம்” எனவும் கூறினார்.

    தொடர்ந்து அவர் கூறும்போது, “தினந்தோறும் உறுப்பினர்கள் புதிய வழித்தடங்கள், சிறப்பான சேவைகள் என புதிய கோரிக்கைகளுடன் வருகின்றனர். அடுத்த 12 ஆண்டுகளுக்கு இந்த வகையில் ரூ.50 லட்சம் கோடி தேவைப்படுகிறது. அதை வழங்குவது மத்திய அரசுக்கு சாத்தியம் இல்லை. இதை நாம் அனைவரும் அறிவோம். மேலும் பட்ஜெட் கட்டுப்பாடுகளும், பிற உண்மையான பிரச்சினைகளும் உள்ளன” எனவும் கூறினார்.

    “பயணிகள் வசதிக்காக புதிய ரெயில்களை இயக்க ஆயிரக்கணக்கான ரெயில்களும், கூடுதலான முதலீடுகளும் தேவைப்படுகின்றன. முதலீடு செய்வதில் தனியார் துறையினர் ஆர்வமாக இருந்தால் வரலாம், தற்போதைய அமைப்பில் சேர்ந்து இயங்கலாம். இதன் மூலம் நுகர்வோரும், பயணிகளும் பயன்அடைவார்கள்” என கூறினார்.

    ரெயில்வே ராஜாங்க மந்திரி சுரேஷ் அங்காடி கூறும்போது, “ நாங்கள் வணிக ரீதியிலான சேவைகளையும், ரெயிலில் ஏறிய பின்னர் பயணிகளுக்கு தேவைப்படுகிற சேவைகளையும் தனியார் துறையினரிடம் இருந்து பெறுகிறோம். இதன் உரிமை ரெயில்வே துறைக்குத்தான். நாங்கள் உரிமங்களை மட்டுமே அளிக்கிறோம். அவர்கள் புதிய கட்டணங்களை கொண்டு வருகிறார்கள்” என்றார்.

    “தற்போது ரெயில்வேயில் ஊழியர்களாக இருப்பவர்களுக்கு பாதிப்பு இல்லை. தனியார் துறையினர் சிறப்பான சேவைகளை வழங்குவார்கள். கூடுதலான வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவார்கள்” என்றும் அவர் கூறினார்.

    ரெயில்வே ராஜாங்க மந்திரி சுரேஷ் அங்காடி தொடர்ந்து கூறும்போது, “ரெயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்புக்கும், தூய்மைக்கும் ரெயில்வே எப்போதும் முன்னுரிமை அளிக்கும். இதில் ஏதாவது ரெயில் நிலையங்களில் சிக்கல்கள் இருந்தால் அரசு அதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும். எல்லா ரெயில் நிலையங்களிலும் பெண்களுக்கு என ஓய்வு அறை இருக்கும். போலீஸ் உதவியும் வழங்கப்படும்” என்றார்.

    “ரெயிலில் சேவை வழங்குகிற தனியார் பற்றி ஏதேனும் புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுப்பதை ரெயில்வே தொடருமா?” என்ற கேள்விக்கு ரெயில்வே ராஜாங்க மந்திரி சுரேஷ் அங்காடி, “நல்ல யோசனைதான். ஏதேனும் பிரச்சினைகள் வந்தால், ரெயில்வே அதிகாரிகள் அவற்றை கவனிப்பார்கள்” என பதில் அளித்தார்.
    Next Story
    ×