search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதின் கட்காரி
    X
    நிதின் கட்காரி

    மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சி 6 மாதம் கூட நிலைக்காது - நிதின் கட்காரி சாபம்

    சித்தாந்த ரீதியில் வேறுபாடு கொண்ட காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாராஷ்டிராவில் அமைக்கும் ஆட்சி 6 மாதம் கூட நிலைக்காது என நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
    டேராடூன்:

    மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 ஆகிய தொகுதிகளை கைப்பற்றியது.

    ஆட்சியமைக்க 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் எந்த கட்சியினருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சியில் சமபங்கு வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக நிராகரித்ததையடுத்து கூட்டணியில் இருந்து சிவசேனா கட்சி விலகியது. 

    இந்த அரசியல் குழப்பங்கள் காரணமாக மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்றுவருகிறது.

    இதற்கிடையில், பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்த சிவசேனா கட்சி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. 

    இந்த கூட்டணி தங்கள் குறைந்தபட்ச செயல்திட்டத்தை உறுதிபடுத்தியதையடுத்து கூட்டணி ஆட்சி தொடர்பான ஒப்பந்தம் இன்று இறுதி வடிவம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதற்காக இந்த கட்சிகளின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர்.

    உதவ் தாக்ரே, சோனியா காந்தி, சரத்பவார்

    சிவசேனா தலைவர் உதவ் தாக்ரே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டால் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க இந்த கூட்டணி இன்னும் ஓரிரு நாட்களில் ஆளுநரிடம் உரிமை கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் சிவசேனா அமைத்துள்ள கூட்டணி தொடர்பாக பாஜகவின் முக்கிய தலைவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    ’மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி. சித்தாந்த ரீதியில் வேறுபட்ட இந்த கட்சிகளின் ஒரே நோக்கம் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியை அமைத்துவிடக்கூடாது என்பதே. அதற்காகத்தான் இந்த கூட்டணியை அமைத்துள்ளன. 

    ஆகவே இந்த கட்சிகள் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைக்குமா? என்பதே சந்தேகமாகத்தான் உள்ளது. ஒருவேளை இந்த கூட்டணி ஆட்சியை அமைத்தாலும் அவர்களுக்கு இடையே உள்ள சித்தாந்த வேறுபாடுகளால் அந்த ஆட்சி 6 முதல் 8 மாதங்களுக்கு மேல் நீடிக்காது. 

    ஆகவே கிரிக்கெட்டை போன்று அரசியலிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’. என கட்காரி கூறினார்.
    Next Story
    ×