search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண விமான செலவு ரூ.255 கோடி

    கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண விமான செலவு ரூ.255 கோடி என மாநிலங்களவையில் மந்திரி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு விமானத்திற்காக எவ்வளவு செலவிடப்படுகிறது என்று பாராளுமன்ற மாநிலங்களவையில் எழுத்து மூலம் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி முரளிதரன் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக தனி விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த தனி விமானங்களுக்கு கட்டணமாக மத்திய அரசு ரூ.255 கோடி செலவு செய்துள்ளது.

    2016-17-ம் ஆண்டு மோடி வெளிநாடு சென்றதற்கு ரூ.76.27 கோடி செலவானது. 2017-18-ம் ஆண்டு ரூ.99.32 கோடி செலவானது. 2018-19-ம் ஆண்டு ரூ.79.91 கோடி செலவானது.

    தற்போதைய நிதியாண்டில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு பயன்படுத்தப்பட்ட தனி விமானங்களுக்கான கட்டணங்களுக்கு இதுவரை ரசீது பெறப்படவில்லை. எனவே நடப்பு நிதியாண்டில் எவ்வளவு செலவானது என்ற தொகை தெரியவில்லை.

    பிரதமர் மோடியின் உள்நாட்டு பயணங்களுக்கு விமானப்படை விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் உள்நாட்டு பயணங்களுக்கு பிரதமர் மோடி ராணுவத்தின் ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறார்.

    உள்நாட்டு பயணங்கள் அரசு முறை பயணமாக அமைவதால் அதற்கு கட்டணங்கள் செலுத்தப்படுவது இல்லை. எனவே உள்நாட்டு பயணங்கள் அனைத்தும் பிரதமருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

    இவ்வாறு மத்திய மந்திரி முரளிதரன் தெரிவித்தார்.
    Next Story
    ×