search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய உள்துறை மந்திரி அமித் ‌ஷா
    X
    மத்திய உள்துறை மந்திரி அமித் ‌ஷா

    அயோத்தி வழக்குக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டது - அமித் ‌ஷா குற்றச்சாட்டு

    அயோத்தி வழக்குக்கு காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டை போட்டது என்று அமித் ‌ஷா குற்றம் சாட்டினார்.
    ராஞ்சி:

    பா.ஜனதா ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பா.ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ‌ஷா, நேற்று ஜார்க்கண்ட் மாநிலம் மணிகா, லோகர்டாகா ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:-

    அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சி, அயோத்தி வழக்குக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது. அதனால் அயோத்தி வழக்கில் தீர்வு காணப்படாமலே இருந்தது.

    நாங்கள் அரசியல் சட்டத்தின் கட்டமைப்புக்கு உட்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என்று விரும்பினோம். இப்போது பாருங்கள். ராமரின் அருளால், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான வழியை சுப்ரீம் கோர்ட்டு திறந்து விட்டுள்ளது.

    அதுபோல், கா‌‌ஷ்மீர் பிரச்சினைக்கும் காங்கிரஸ் கட்சி தீர்வை தாமதப்படுத்தியது. தனது ஓட்டு வங்கியை பாதுகாப்பதற்காக, 70 ஆண்டுகளாக அப்பிரச்சினையை பற்றி எரிய வைத்தது. ஆனால், பிரதமர் மோடி, பாரத மாதாவின் மணிமகுடத்தில் இருந்த 370-வது பிரிவு என்ற கறையை துடைத்தார். கா‌‌ஷ்மீர் வளர்ச்சிப்பாதையில் செல்ல வழிவகுத்தார்.

    2-வது முறையாக மோடி அரசு பதவி ஏற்றவுடன், முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே 370-வது பிரிவு ரத்து செய்யப்பட் டது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரசும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் கூட்டணி அமைத்துள்ளன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, கோடிக்கணக்கான ரூபாய் ஊழலில் ஈடுபட்ட கட்சி.

    காங்கிரஸ் கட்சி, பழங்குடியினரையும், ஏழைகளையும் ஏமாற்றிய கட்சி. பழங்குடியினருக்கு காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்று சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் சொல்லத் தயாரா? அதுபோல், இந்த மாநிலத்துக்கு செய்த சாதனைகளை பா.ஜனதா சொல்ல தயாராக உள்ளது.

    பா.ஜனதா அரசு, இந்த மாநிலத்தை நக்சலைட்டுகள் பிடியில் இருந்து விடுவித்துள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு சதவீதத்தை உயர்த்த குழு அமைக்கப்படும். ஜார்க்கண்ட் தனி மாநிலத்தை உருவாக்கியதே வாஜ்பாய் தலைமையிலான பா.ஜனதா அரசுதான்.

    இவ்வாறு அமித் ‌ஷா பேசினார்.
    Next Story
    ×