search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரக்யா சிங் தாகூர்
    X
    பிரக்யா சிங் தாகூர்

    பாதுகாப்புத் துறையின் பாராளுமன்ற ஆலோசனை குழுவில் இடம்பெற்றார் சர்ச்சை எம்.பி. பிரக்யா தாகூர்

    நாட்டின் பாதுகாப்புத் துறைக்கான பாராளுமன்ற ஆலோசனை குழுவில் மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண் எம்.பி. பிரக்யா சிங் தாகூர் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி தலைமையில் செயல்படும் பாதுகாப்பு துறைக்கான பாராளுமன்ற ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. 

    பல்வேறு கட்சிகளை சேர்ந்த 12 லோக் சபை உறுப்பினர்கள், 9 ராஜ்ய சபை உறுப்பினர்கள் என மொத்தம் 21 உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த குழு நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளது.

    இந்நிலையில், பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை குழுவில், சர்ச்சைக்குரிய பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் தாகூர் இடம்பெற்றுள்ளார்.

    கடந்த 2008-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் பகுதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ள போபால் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த தகவல் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த குழுவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தி.மு.க.வை சேர்ந்த ராஜா மற்றும் பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தற்போது வீட்டுக்காவலில் உள்ள ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரி ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

    கோப்பு படம்

    இதற்கிடையில், பாதுகாப்புத் துறைக்கான ஆலோசனை குழுவில் பிரக்யா சிங் தாகூர் சேர்க்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா தனது டுவிட்டர் பக்கதில் வெளியிட்ட பதிவில், ’ பிரதமர் மோடி பிரக்யா சிங் தாகூரை மனதளவில் மன்னிக்கவில்லை.

    ஆனாலும், அவருக்கு நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான துறைகளில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து மோடியாக இருந்தால் எதுவும் சாத்தியம் என்பது தெரியவந்துள்ளது’ என பதிவிட்டுள்ளார்.

    பிரக்யா சிங் தாகூர் சமீபத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை ‘தேச பக்தன்’ எனக்கூறி சர்ச்சையில் சிக்கியது நினைவிருக்கலாம்.
    Next Story
    ×