search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானா எம்எல்ஏ ரமேஷ் சென்னமானேளி
    X
    தெலுங்கானா எம்எல்ஏ ரமேஷ் சென்னமானேளி

    தெலுங்கானா எம்.எல்.ஏ.வின் குடியுரிமை அதிரடி ரத்து- பதவிக்கும் ஆபத்து

    குடியுரிமை தொடர்பான விண்ணப்பத்தில் தவறான தகவலை பதிவிட்டதாக கூறி தெலுங்கானா எம்எல்ஏவின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    தெலுங்கானா மாநிலம் வெமுல்வாடா தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் சென்னமானேளி. ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியை சேர்ந்தவர்.

    இந்தியாவில் பிறந்த இவர் ஜெர்மனியில் குடியேறிய அந்நாட்டு குடியுரிமையை பெற்று அங்கு வசித்து வந்தார். இவரது தந்தை ராஜேஸ்வர்ராவ் 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.

    ரமேஷ் சென்னமானேளி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக 2008-ம் ஆண்டு இந்தியா திரும்பினார். அப்போது இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தார். இதில் அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் ரமேஷ் சென்னமானேளி இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்ததில் விதிகளை மீறி இருப்பது தெரிய வந்தது.

    ஒரு நபர் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கும் முன்பாக அவர் இந்தியாவில் தொடர்ந்து ஒரு ஆண்டு தங்கி இருக்க வேண்டும். ஆனால், ரமேஷ் சென்னமானேளி குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன்பாக 96 நாட்கள் மட்டுமே இந்தியாவில் தங்கி இருந்துள்ளார்.

    மேலும் அவர் ஜெர்மனி குடியுரிமையை துறக்கவில்லை என்றும் தொடர்ந்து அந்நாட்டு பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து உண்மைகளை மறைத்து தவறான தகவல் கொடுத்ததால் ரமேஷ் சென்னமானேளியின் இந்திய குடியுரிமையை கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது.

    இதை எதிர்த்து அவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் குடியுரிமை ரத்து முடிவை உள்துறை அமைச்சகம் மறு ஆய்வு செய்ய கடந்த ஜூலை 15-ந்தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் உண்மை தகவல்களை மறைத்து அரசை தவறாக வழி நடத்தியதால் ரமேஷ் சென்னமானேளியின் குடியுரிமை ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அதிரடியாக அறிவித்தது.

    ரமேஷ் சென்னமானேளி இந்திய குடியுரிமைக்கு விணப்பிப்பதற்கு முன்பாக ஒரு ஆண்டுக்கு மேல் அவர் இந்தியாவில் இல்லை. எனவே அவருக்கு குடியுரிமை வழங்க முடியாது என்றும் இந்த நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ரமேஷ் சென்னமானேளி கூறும்போது, நான் மீண்டும் ஐகோர்ட்டை நாடுவேன். எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

    குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரமேஷின் எம்.எல்.ஏ.பதவி பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×