search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே
    X
    உத்தவ் தாக்கரே

    மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சி- உத்தவ் தாக்கரே முதல்வர் ஆகிறார்

    மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளன. உத்தவ் தாக்கரே விரைவில் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மாதம் 21-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது.

    பாரதிய ஜனதா, சிவசேனா ஒரு அணியாகவும், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் மற்றொரு அணியாகவும் போட்டியிட்டன.

    288 தொகுதிகளில் பாரதிய ஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும், தேசியவாத காங்கிரசுக்கு 54 இடங்களும், காங்கிரசுக்கு 44 இடங்களும் கிடைத்து இருந்தன.

    அதிக இடங்களை கைப்பற்றி இருந்த பாரதிய ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகள் நடந்தன.

    ஆனால், அதிகாரங்களை பங்கிட்டு கொள்வதில் இரு கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

    கூட்டணி ஆட்சி அமைந்தால் சிவசேனாவுக்கு 2½ ஆண்டு காலம் முதல்- மந்திரி பதவியும், சரிபாதி மந்திரி பதவிகளும் தருவதாக தேர்தலுக்கு முன்பு பாரதிய ஜனதா வாக்குறுதி அளித்ததாக சிவசேனா தெரிவித்தது.

    அதன்படி பதவிகளை தர வேண்டும் என்று சிவசேனா கேட்டது. ஆனால், அதற்கு பாரதிய ஜனதா சம்மதிக்கவில்லை. இதனால் அந்த கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

    அதே நேரத்தில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் சேர்ந்து சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சித்தது.

    அதனால் ஜனாதிபதி ஆட்சி மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 3 கட்சி தலைவர்களும் ரகசியமாக பேசி வந்தனர்.

    சிவசேனா இந்துத்துவா கொள்கையை தீவிரமாக கடைபிடிக்கும் கட்சி. ஆனால், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மதசார்பற்ற கட்சிகளாக செயல்பட்டு வருகின்றன.

    அந்த கட்சிகள் சிவசேனா கட்சியுடன் கூட்டணி சேருவதில் கொள்கை முரண்பாடு இருந்ததால் இருகட்சிகளும் சிவசேனாவுடன் சேருவதற்கு தயக்கம் காட்டி வந்தன.

    எனவே, 3 கட்சிகளும் குறைந்தபட்ச கொள்கை திட்டங்களை உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

    தீவிர இந்துத்துவா கொள்கையை கடைபிடிக்க கூடாது. மாநில நலன் தொடர்பான வி‌ஷயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் குறைந்த பட்ச கொள்கையில் சேர்க்கப்பட்டன.

    ஆட்சி அமைப்பது தொடர்பான அனைத்து விவகாரங்களும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மேற்பார்வையில் நடந்தன.

    அவர் கடந்த திங்கட்கிழமை டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். ஆரம்பத்தில் இருந்தே சிவசேனாவுடன் கூட்டணி சேருவதற்கு சோனியா காந்தி தயக்கம் காட்டி வந்தார்.

    சோனியா காந்தி


    ஏ.கே.அந்தோணி உள்பட பல தலைவர்களும் சிவசேனாவுடன் கூட்டணி வேண்டாம் என்று சோனியா காந்தியிடம் கூறி வந்தனர். இதனால் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் சோனியா காந்தி தவித்தார்.

    இந்த நிலையில் சரத் பவார் மகாராஷ்டிராவின் நிலைமையை முழுமையாக விளக்கினார். 3 கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்காவிட்டால் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்து விடும். அந்த கட்சி ஆட்சி அமைப்பதற்கு நாம் வழிவிட்டது போன்ற சூழ்நிலை உருவாகும். இது, நமது கட்சிகளுக்குத்தான் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறினார்.

    இதையடுத்து சிவனோவுடன் கூட்டணி சேர சோனியா சம்மதம் தெரிவித்தார்.

    உடனே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கின. நேற்று டெல்லியில் சரத்பவார் வீட்டில் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

    காங்கிரஸ் தரப்பில் மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், மல்லிகார்ஜூன கார்கே, ஜெயராம் ரமேஷ், கே.கே. வேணுகோபால், மகாராஷ்டிரா காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான், மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் நசீம்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தேசியவாத காங்கிரஸ் தரப்பில் சரத்பவார், அஜித் பவார், ஜெயந்த் பட்டேல், ஜகான் பூஜ்பால், நவாப் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    நேற்று மாலை தொடங்கிய கூட்டம் இரவு வரை நீடித்தது. 3 மணி நேரம் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

    அதில், 3 கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் குறைந்தபட்ச கொள்கை திட்டம் மற்றும் ஆட்சி அதிகார பகிர்வு குறித்து முடிவுகளை எடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து பிரிதிவிராஜ் சவான், நவாப் மாலிக் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது சிவசேனாவுடன் இணைந்து நாங்கள் ஆட்சி அமைக்க போகிறோம். 5 ஆண்டு கால நிலையான ஆட்சியை மகாராஷ்டிரா மக்களுக்கு வழங்குவோம் என்று கூறினார்கள்.

    அதே நேரத்தில் சிவசேனா கட்சி மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தும் 3 கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க போவதாக அறிவித்தார்.

    இன்று பிற்பகலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மும்பையில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். அதில், மகாராஷ்டிரா தலைவர்கள் மற்றும் டெல்லி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். அதில், இறுதி கட்ட முடிவுகள் எடுக்கப்படும்.

    நாளை சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் 3 கட்சி தலைவர்களும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.

    அதில், 3 கட்சிகளும் இணைந்து எந்த மாதிரி ஆட்சி அமைப்பது, அதிகாரங்களை எப்படி பகிர்ந்து கொள்வது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

    நாளை 3 கட்சி தலைவர்களும் சந்தித்ததற்கு பிறகு ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர். சனிக்கிழமை அவர்கள் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்கும்படி கேட்டுக் கொள்வார்கள்.

    ஜனாதிபதி ஆட்சி இருப்பதால் அதை விலக்கிக்கொள்ளும்படி மத்திய அரசுக்கு கவர்னர் பரிந்துரை செய்ய வேண்டும். அதை ஏற்று ஜனாதிபதி ஆட்சி விலக்கிக்கொள்ளப்படும். அதை தொடர்ந்து புதிய ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுப்பார்.

    3 கட்சி கூட்டணியில் அதிகாரங்களை எப்படி பகிர்ந்து கொள்வது என்ற பார்முலாவை உருவாக்கி உள்ளனர். சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் முதல்-மந்திரி பதவியை 2½ ஆண்டு காலம் பகிர்ந்து கொள்ள உள்ளன.

    சிவசேனா முதலாவதாக முதல்-மந்திரி பதவி வகிக்கும். அடுத்த 2½ ஆண்டு தேசியவாத காங்கிரசுக்கு முதல்-மந்திரி பதவி செல்லும்.

    தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு துணை முதல்-மந்திரி பதவியும் வழங்கப்படும்.

    மகாராஷ்டிராவில் மொத்தம் 43 பேரை மந்திரியாக நியமித்து கொள்ளலாம். கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை வைத்து உரிய விகிதாச்சாரப்படி மந்திரி பதவிகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.

    இதன்படி சிவசேனாவுக்கு 16 மந்திரி பதவிகளும், தேசியவாத காங்கிரசுக்கு 15 பதவிகளும், காங்கிரசுக்கு 12 பதவிகளும் வழங்கப்படும்.

    முக்கிய இலாகாக்களை எவ்வாறு பிரித்துக் கொள்வது என்பது பற்றியும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    சிவசேனா முதலில் முதல்-மந்திரி பதவியை ஏற்க உள்ள நிலையில் அந்த கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

    தேசியவாத காங்கிரசுக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்படும் போது சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே முதல்- மந்திரி ஆவார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

    சுப்ரியா சுலே முதல்- மந்திரி ஆனால் மகாராஷ்டிராவில் முதல் பெண் முதல்-மந்திரியாக அவர் இருப்பார்.

    உத்தவ் தாக்கரே தலைமையிலான மந்திரிசபை அடுத்த வாரத்தில் பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் பிரமாண்ட விழா நடத்தி பதவி ஏற்க உள்ளனர்.

    இது சம்பந்தமாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, டிசம்பர் 1-ந் தேதிக்கு முன்பாக புதிய மந்திரிசபை பதவி ஏற்று விடும் என்று தெரிவித்தார்.

    சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு சில எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள சமாஜ் வாடி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பகுஜன் விகாஷ் அகாதி, சுவாதி மானி பக்ஸ் ஆகிய கட்சிகளும் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன.
    Next Story
    ×