search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலையில் நடைபெற்ற படி பூஜை
    X
    சபரிமலையில் நடைபெற்ற படி பூஜை

    சபரிமலை கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு

    சபரிமலை கோவிலில் படி பூஜை செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.75 ஆயிரம் கட்டணமாக தேவஸ்தானத்திற்கு செலுத்த வேண்டும். படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தியதால் கடந்த மண்டல பூஜையின்போது சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் கூட்டம் குறைந்தது.

    ஆனால் இந்த ஆண்டு சபரிமலையில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதி நிலவுகிறது. இதனால் முதல் நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்றும், ஐயப்ப பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    சபரிமலை

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் உதயாஸ்தனமான பூஜை. சகஸ்கரகலச பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த பூஜைகளில் 18-ம் படி பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இந்த படி பூஜை செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.75 ஆயிரம் கட்டணமாக சபரிமலை தேவஸ்தானத்திற்கு செலுத்த வேண்டும். படி பூஜை செய்தால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம். இதனால் படி பூஜை செய்ய பக்தர்களிடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது.

    மேலும் முன்பதிவு செய்து தான் படி பூஜை செய்ய முடியும். தற்போது 2036-ம் ஆண்டு வரை படி பூஜைக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த பூஜையின்போது, பக்தர்கள் 18-ம் படி ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் மண்டல பூஜை காலத்தில் படி பூஜை நடத்தப்படுவதில்லை. மாத பூஜை காலங்களில் மட்டுமே படி பூஜை நடைபெறும்.

    ஆனால் கடந்த ஆண்டு மாத பூஜைகளின்போது சபரிமலையில் இயற்கை சீற்றம் காரணமாக அதிக மழை பெய்ததால் படி பூஜைகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு மண்டல பூஜையின்போது படி பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, நேற்று முன்தினம் 18-ம் படியில் பூஜை தொடங்கியது. படி பூஜையின்போது மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் 18-ம் படிக்கு புனித நீர் ஊற்றி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு பூஜை செய்தார். வருகிற 24-ந்தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் இரவு 7 மணி முதல் 8 மணி வரை படி பூஜை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை கோவிலில் நடைபெறும் மற்றொரு முக்கிய பூஜை உதயாஸ்தமன பூஜையாகும். இதற்கு கட்டணம் ரூ.40 ஆயிரம். உதயாஸ்தமன பூஜைக்கு 2027-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.


    Next Story
    ×