search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபர் மசூதி
    X
    பாபர் மசூதி

    அயோத்தி வழக்கு தீர்ப்பின் மீது மறுஆய்வு மனு தாக்கல் இல்லை - சன்னி வக்பு வாரியம் திட்டவட்டம்

    அயோத்தி வழக்கு தீர்ப்பின் மீது சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்போவது இல்லை என்று சன்னி வக்பு வாரியம் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமஜென்மபூமி, பாபர் மசூதி அமைந்திருந்ததாக கூறப்பட்டு வந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பான வழக்கை விசாரித்து, இந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லாவும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் தொடுத்த மேல்முறையீட்டு வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து, சர்ச்சைக்குரிய இடம் என கூறப்பட்டு வந்த 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. மேலும் முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு

    இதையொட்டி சன்னி வக்பு வாரியத்தின் தலைவர் ஜபுர் பரூக்கி, உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறும்போது, ‘‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்வதில்லை என்பது தீர்ப்புக்கு முன்னரே நாங்கள் எடுத்த முடிவு ஆகும். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மாட்டோம்’’ என திட்டவட்டமாக கூறினார்.

    தொடர்ந்து அவர் பேசும்போது, ‘‘சன்னி வக்பு வாரியத்தின் 8 உறுப்பினர்களும் வரும் 26-ந் தேதி லக்னோவில் வாரிய தலைமையகத்தில் கூடிப்பேசுகிறோம். அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க வழங்கப்படுகிற 5 ஏக்கர் நிலத்தை என்ன செய்வது என்பது பற்றி முக்கிய முடிவு செய்வோம்’’ என்றார்.

    இந்த நிலத்தில் கல்வி நிறுவனம் அமைக்கலாம் அல்லது மருத்துவமனை கட்டலாம் என்பது உள்பட பல்வேறு திட்டங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    அயோத்தி வழக்கு தீர்ப்பின் மீது அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் டிசம்பர் 9-ந் தேதி மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய உள்ளது.

    ஆனால் இது தொடர்பாக கடந்த 17-ந் தேதி லக்னோவில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ள தனக்கு அழைப்பும் வரவில்லை, கூட்ட முடிவு குறித்து தனக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவும் இல்லை என்று சன்னி வக்பு வாரியத்தின் தலைவர் ஜபுர் பரூக்கி தெரிவித்தார்.

    ‘‘‌‌ஷரியத் சட்டப்படி தானம் பெறுகிற நிலத்தில் மசூதி கட்டக்கூடாது என அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறுகிறதே?’’ என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், ‘‘மசூதிக்காக தருகிற நிலத்தை மறுப்பதற்காக இப்படி பல வி‌‌ஷயங்களை சொல்லலாம். இதைப்பற்றியெல்லாம் 26-ந் தேதி நாங்கள் விவாதிப்போம்’’ என கூறினார்.



    Next Story
    ×