search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா
    X
    அமித்ஷா

    நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை- அமித் ஷா

    நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா அறிவித்தார்.
    புதுடெல்லி:

    நாட்டின் உண்மையான குடிமக்களின் பெயர்களை கொண்ட பதிவேடு என்று கூறப்படுவது என்.ஆர்.சி. என்று அழைக்கப்படுகிற தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகும்.

    இந்த பதிவேடு, முதன்முதலாக அசாம் மாநிலத்தில் 1951-ம் ஆண்டு, தயாரித்து வெளியிடப்பட்டது.

    அதன்பின்னர் வங்காளதேசத்தில் இருந்து லட்சக்கணக்கானோர் அசாமில் குடியேறி பிரச்சினைகள் எழுந்து, இது தொடர்பான விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு போனபோது, அசாமில் மீண்டும் என்.ஆர்.சி. தயாரித்து வெளியிடுமாறு உத்தரவிடப்பட்டது.

    அதன் பேரில் ரூ.1,200 கோடிக்கு மேல் செலவு செய்து என்.ஆர்.சி. தயாரித்து சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. ஆனால் அதில் 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேர் பெயர்கள் விடுபட்டு போய் இருப்பதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சை உண்டானது.

    என்.ஆர்.சி.யை பொறுத்தமட்டில், குடிமக்கள்தான் விண்ணப்பித்து, தங்களது குடியுரிமையை உரிய ஆவணங்கள் மூலம் நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

    தேசிய குடிமக்கள் பதிவேடு


    இந்த நிலையில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று அறிவித்து, சபையை அதிர வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் செயல்முறை நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும். மதத்தை வைத்து யாரும் கவலைப்பட தேவை இல்லை. இது தேசிய குடிமக்கள் பதிவேட்டில் அனைவரையும் கொண்டு வருவதற்கான ஒரு நடவடிக்கை.

    எல்லா மதங்களையும் சேர்ந்த இந்திய குடிமக்கள் அனைவரும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்படுவார்கள்.

    மதத்தின் அடிப்படையில் எந்த பாகுபாடும் பார்க்கப்பட மாட்டாது. தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்முறையும், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவும் வெவ்வேறானவை.

    அசாமில் தேசிய குடியுரிமை பதிவேட்டில் பெயர் இடம் பெறாதவர்கள் அதற்கான தீர்ப்பாயத்தில் முறையிட முடியும். அசாம் முழுவதும் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தீர்ப்பாயத்துக்கு செல்வதற்கு பணம் இல்லாதவர்களுக்கு, வக்கீலை அமர்த்திக்கொள்வதற்கான செலவை அசாம் மாநில அரசு ஏற்கும்.

    இவ்வாறு அமித் ஷா கூறினார்.

    நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்ற அமித் ஷாவின் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×