search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு 950 முறை அத்துமீறி தாக்கிய பாகிஸ்தான்

    காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பாகிஸ்தான் 950 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி மத்திய அரசு ரத்து செய்தது.

    மேலும் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிந்து உத்தரவிட்டது.இதையடுத்து காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    செல்போன், இணையதள சேவை முடக்கம், 144 தட உத்தரவு, ரெயில் சேவை நிறுத்தம் போன்றவை செயல்படுத்தப்பட்டன.

    அசம்பாவித சம்பவங்களை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு நிலைமை சீராகி வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு 100 நாட்களுக்கு பிறகு ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

    ஆனால் இன்னும் காஷ்மீரில் தகவல் தொடர்பு சேவை முழுமையாக கொடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பாகிஸ்தான் 950 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது என்றும் இந்த ஆண்டு அத்து மீறிய தாக்குதல் 50 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மத்திய உள்துறை இணை மந்திரி ஜி.கி‌ஷன்ரெட்டி பாராளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்றம்

    சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு காஷ்மீரில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் 950 முறை அத்துமீறி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளது.

    அதேபோல் ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லையில் 79 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 2300 முறை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது. சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு 50 சதவீதம் தாக்குதல் அதிகரித்து இருக்கிறது.

    2018-ம் ஆண்டில் 1629 முறை அத்துமீறி தாக்குதல் நடந்து இருந்தது. 2016-ம் ஆண்டு 228 தாக்குதலும், 2017-ம் ஆண்டு 860 தாக்குதலும் நடந்து உள்ளது.

    இதுபோன்ற அத்துமீறி தாக்குதலின் போது பயங்கரவாதிகள் ஊடுருவலுக்கு பாகிஸ்தான் உதவுகிறது. 2018-ம் ஆண்டு 328 முறை பயங்கரவாதிகள் ஊடுருவலுக்கு முயன்றனர்.

    ஆகஸ்டு 5-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரை கல்வீச்சு, சட்டம்- ஒழுங்கு தொடர்பாக 190 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 765 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரை கல்வீச்சு தொடர்பாக 361 வழக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பாக 1458 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3797 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

    கல்வீச்சு சம்பவங்களை தடுக்க பிரச்சினைகளை உண்டாக்குபவர்கள், தூண்டி விடுபவர்கள் உள்ளிட்டோரை கண்டறிந்து அவர்களை பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தல் போன்ற முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    காஷ்மீர் பள்ளத்தாக்கில் கல்வீச்சு சம்பவங்கள் பின்னணியில் பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் மற்றும் ஹூரியத்தை சேர்ந்த செயல்பாட்டாளர்களும் இருப்பது தெரியவந்துள்ளது.

    பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டிய குற்றத்துக்காக 18 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆகஸ்டு முதல் அக்டோபர் வரை 34 லட்சத்து 10 ஆயிரத்து 319 சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×