search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய சுற்றுச்சூழல் இணை மந்திரி பபுல் சுப்ரியோ
    X
    மத்திய சுற்றுச்சூழல் இணை மந்திரி பபுல் சுப்ரியோ

    பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்ந்து சென்னை மூழ்குமா? - மத்திய மந்திரி பதில்

    பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்ந்து சென்னை உள்ளிட்ட கடற்கரை நகரங்கள் மூழ்குமா? என்பதற்கு மத்திய மந்திரி பபுல் சுப்ரியோ மாநிலங்களவையில் பதில் அளித்தார்.
    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, 2100-ம் ஆண்டுக்குள் புவி வெப்பமயமாவதால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடல் மட்டம் உயர்ந்து சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கடற்கரை நகரங்கள் மூழ்கும் நிலை ஏற்படும் என்று ஐ.நா. பருவநிலை மாற்றத்துக்கான நிர்வாக குழு எச்சரித்துள்ளதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு எழுத்துமூலம் பதில் அளித்து மத்திய சுற்றுச்சூழல் இணை மந்திரி பபுல் சுப்ரியோ கூறியதாவது:-

    இந்திய கடற்கரை பகுதிகளில் கடல் மட்டம் வருடத்துக்கு சராசரியாக 1.70 மில்லிமீட்டர் என்ற விகிதத்தில் உயர்ந்து வருவதாக கருதப்படுகிறது. அப்படியென்றால் கடந்த 50 ஆண்டுகளில் இந்திய கடற்கரை பகுதிகளில் கடல் மட்டம் 8.5 சென்டிமீட்டர் உயர்ந்திருப்பதாக அர்த்தம்.

    செயற்கைகோள் தொழில்நுட்பம் மற்றும் நவீன ஆய்வுகள் வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் இதில் மாறுபாடு உள்ளதை வெளிப்படுத்தி உள்ளது. 2003-2013 காலகட்ட 10 ஆண்டுகளில் இந்த பகுதியில் கடல் மட்டம் ஆண்டுக்கு 6.1 மி.மீ. என்ற விகிதத்தில் உயர்ந்துள்ளது.

    சுனாமி, புயல் சுழற்சி, கடற்கரை வெள்ளம், கடல் அரிப்பு போன்ற மோசமான நிகழ்வுகளாலும் கடல் மட்டம் உயர்ந்து கடற்கரையில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கும் அபாயத்தை ஏற்படுத்தும். ஆனாலும் கடல் மட்டம் உயருவதால் கடற்கரை பகுதிகள் வெள்ளத்தால் மூழ்குமா என்பதை அந்த பகுதியின் கடல் மட்டத்துக்கு மேலே உயரும் அளவை வைத்து மதிப்பிட வேண்டும்.

    இந்த கடற்கரை பகுதிகளில் நிலப்பகுதி மூழ்கிவிட்டதாகவோ அல்லது ஆய்வில் மூழ்கியது தெரியவந்ததாகவோ நீண்டகால புள்ளிவிவரங்கள் எதுவும் இதுவரை இல்லை. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் மட்டம் உயரும் விகிதத்தை உறுதியாக கூறமுடியாது.

    உதாரணத்துக்கு, டைமண்ட் துறைமுகத்தில் கடல் மட்டம் உயரும் விகிதம் அதிகமாக இருப்பதற்கு அங்கு பெரிய அளவில் நிலப்பகுதி புதைந்ததும் ஒரு காரணம். அதேபோல கண்ட்லா, ஹால்டியா, போர்ட்பிளேர் ஆகிய இடங்களுக்கும் இது பொருந்தும்.

    இவ்வாறு பபுல் சுப்ரியோ கூறினார்.
    Next Story
    ×