search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை மாநகராட்சி கட்டிடம்
    X
    மும்பை மாநகராட்சி கட்டிடம்

    மும்பை மேயர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்த மாட்டோம் - பாஜக அறிவிப்பு

    நீண்டநாள் கூட்டணி கட்சியான சிவசேனாவை பிரிந்திருக்கும் பாஜக மும்பை மேயர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என அறிவித்துள்ளது.
    மும்பை:

    பிர்ஹன் மும்பை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் தனித்தனியாக போட்டியிட்டன.

    இந்த தேர்தலில் வார்டு உறுப்பினர்களுக்கான அதிக இடங்களில் சிவசேனா வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஆனால், மேயர் பதவிக்கான நபரை தேர்வு செய்வதற்கான பெரும்பான்மை இல்லாததால் சிவசேனாவின் மேயர் வேட்பாளர் விஸ்வநாத் மஹதேஷ்வர் வெற்றி பெறுவதற்கு பாஜக ஆதரவு அளித்தது.

    விஸ்வநாத் மஹதேஷ்வர்

    மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் மந்திரி பதவி தொடர்பாக சமீபத்தில் பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் ஏற்பட்ட தகராறில் இரு கட்சிகளுக்கான நட்புறவு மற்றும் கூட்டணியில் முறிவு ஏற்பட்ட நிலையில் நவம்பர் மாதம் 22-ம் தேதி மீண்டும் மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    பாராளுமன்றத்தில் முன்னர் ஆளும்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த சிவசேனா எம்.பி.க்கள் இன்று தொடங்கிய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி வரிசையில் அமர வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், போதுமான மாநகராட்சி கவுன்சிலர்கள் எங்களிடம் இல்லாததால் மேயர் தேர்தலில் யாரையும் நிறுத்த மாட்டோம் என பாஜக தலைவர் மனோஜ் கோட்டக் தெரிவித்துள்ளார்.

    சிவசேனாவின் மேயர் வேட்பாளரை பாஜக ஆதரிக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் இதுதொடர்பாக கட்சியின் தலைமை தீர்மானிக்கும் என கூறினார்.
    Next Story
    ×