search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பில் கேட்ஸ் - நிதிஷ் குமார்
    X
    பில் கேட்ஸ் - நிதிஷ் குமார்

    பீகார் அரசின் வறுமை ஒழிப்பு, சுகாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு பில் கேட்ஸ் பாராட்டு

    இந்தியா வந்துள்ள பிரபல மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரும், உலகின் பெரும் செல்வந்தரும், மிகப்பெரிய கொடையாளருமான பில் கேட்ஸ் பீகார் அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
    பாட்னா:

    பிரபல மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவரான பில் கேட்ஸ் தனது வருமானத்தின் ஒரு பகுதியை உலகளாவிய அளவில் வறுமை ஒழிப்பு, நோய் ஒழிப்பு தொடர்பான நற்பணிகளுக்கு நன்கொடையாக அளித்து வருகிறார்.

    இதற்காக உருவாக்கப்பட்ட பில் (மற்றும்) மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில், உலகநாடுகளில் போலியோவை ஒழிக்க கடந்த ஆண்டுகளில் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக 28 பில்லியன் அமெரிக்க டாலர்களும், உலக சுகாதார மேம்பாட்டுக்காக 8 பில்லியன் அமெரிக்க டாலர்களும் வழங்கப்பட்டுள்ளது.

    இதுதவிர, இந்தியாவின் சில மாநிலங்களில் சுகாதாரம், விவசாயம், கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைசார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளில் பில் (மற்றும்) மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஈடுபாடு காட்டி வருகிறது.

    மேலும், இந்தியாவின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் கல்வி, குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாடு வளர்ச்சியடையும் நோக்கத்தில் தங்களது தொண்டு நிறுவனத்தின் சார்பில் பல திட்டங்களையும் பில் கேட்ஸ் செயல்படுத்தி வருகிறார்.

    இந்நிலையில், இந்தியா வந்துள்ள பில் கேட்ஸ் இன்று பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமாரை பாட்னா நகரில் சந்தித்தார்.

    நிதிஷ் குமாருடன் ஆலோசனை

    வறுமை ஒழிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு நடவடிக்கைகள், சுகாதார மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பாக கடந்த 20 ஆண்டுகளாக பீகார் அரசு ஆற்றிவரும் பணிகளுக்காக பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்தார்.

    கடந்த 20 ஆண்டுகளில் வறுமையையும் நோய்களையும் ஒழிக்கும் பணியில் சில இடங்கள் மட்டுமே பீகாரைப்போல் திறம்பட செயலாற்றி உள்ளது.

    பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த ஒரு பெண்ணைவிட அவரது வயிற்றில் பிறந்த குழந்தையால் நோய், நொடிக்கு பலியாகாமல் தனது ஐந்தாம் பிறந்தநாளை கொண்டாடும் வாய்ப்பு தற்போது இருமடங்கு அதிகமாகி உள்ளது என இந்த சந்திப்பின்போது பில் கேட்ஸ் தெரிவித்ததாக அவரது அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில்
    கூறப்பட்டுள்ளது.

    மேலும், பீகார் குழந்தைகளின் நோயற்ற வாழ்வு மற்றும் தரமான கல்விக்காக தொடர்ந்து உழைக்க தங்களது தொண்டு நிறுவனம் உறுதியேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×