search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் தேசிய செயலாளர் கே.சி.வேணுகோபால்
    X
    காங்கிரஸ் தேசிய செயலாளர் கே.சி.வேணுகோபால்

    நாட்டை பட்டினி நிலைமைக்கு மத்திய அரசு கொண்டு செல்கிறது - காங்கிரஸ் கடும் தாக்கு

    நாட்டை பட்டினி போன்ற நிலைமைக்கு மத்திய அரசு கொண்டு செல்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி தேசிய பொதுச்செயலாளர்கள், மாநில தலைவர்கள் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்களின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் தலைநகர் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    மேலும் பொருளாதார மந்தநிலைக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து டெல்லியில் வருகிற 30-ந் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்திற்கு பின்பு காங்கிரஸ் தேசிய செயலாளர் கே.சி.வேணுகோபால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசை கண்டித்து மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்கள் அனைத்தும் வருகிற 25-ந் தேதிக்கு முன்பாக நிறைவடையும்.

    மத்திய அரசால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் வருகிற 30-ந் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பா.ஜனதா அரசுக்கு எதிராக பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேசிய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள 2017-18-ம் ஆண்டுக்கான நுகர்வோர் செலவின ஆய்வறிக்கையில் மக்களின் வாங்கும் சக்தி (நுகர்வோர் செலவினம்) கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    கடந்த ஜூன் மாதமே வெளியிட வேண்டிய இந்த ஆய்வறிக்கை அதன் சாதக, பாதக அம்சங்கள் காரணமாக வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த வேணுகோபால் மேலும் கூறுகையில், ‘இதுதொடர்பாக நாங்கள் இந்த கூட்டத்தில் விவாதித்தோம். இது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தவறான பொருளாதார கொள்கையை பின்பற்றி வரும் மத்திய அரசு, நாட்டை பட்டினி போன்ற ஒரு மோசமான நிலைமைக்கு கொண்டு செல்கிறது’ என்றார். 
    Next Story
    ×