search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    ‘ஒரே நாடு, ஒரே சம்பள நாள்’ திட்டம் - மத்திய அரசு கொண்டு வருகிறது

    நாடு முழுவதும் ‘ஒரே நாடு, ஒரே சம்பள நாள்’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஒரே அடையாள அட்டை, ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல் என அமல்படுத்துவதில் பிரதமர் மோடி ஆர்வம் காட்டி வருகிறார்.

    இந்த நிலையில் நாட்டில் உள்ள அமைப்பு ரீதியிலான பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிற ஊழியர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஒரே நாளில் சம்பளம் வழங்கச்செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு அதிரடியாக இறங்கி உள்ளது.

    தனியார் பாதுகாப்பு துறையின் மத்திய சங்கம் சார்பில் டெல்லியில் நேற்று நடந்த பாதுகாப்பு தலைமை உச்சி மாநாட்டில் மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர், “தொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும் உரிய நேரத்தில் தங்கள் சம்பளத்தைப் பெறுவதை உறுதி செய்கிற விதத்தில் ஒரே சம்பள நாள் இருக்க வேண்டும். இதற்கான சட்டத்தை நிறைவேற்றுவதில் பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் கொண்டு உள்ளார்” என குறிப்பிட்டார்.

    இதே போன்று தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிற விதத்தில், ஒரே சீரான குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயம் செய்யவும் மத்திய அரசு எண்ணி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    2014-ம் ஆண்டு மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றது தொடங்கி பல்வேறு தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களை கொண்டு வருவதில் பணியாற்றி வந்துள்ளதாகவும் சந்தோஷ் கங்குவார் குறிப்பிட்டார்.

    இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், சீர்திருத்தம் கொண்டு வருவதற்காக 44 சிக்கலான தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு கையில் எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    தனியார் பாதுகாப்பு துறையானது, வேலை வாய்ப்புகளை வழங்குவதில் முக்கிய பங்கு அளித்து வருவதாக அவர் பாராட்டினார். தற்போது இந்த துறையில் 90 லட்சம் பேர் பணியாற்றுவதாகவும், அடுத்த சில ஆண்டுகளில் இது 2 கோடியை எட்ட வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    தொடர்ந்து சந்தோஷ் கங்குவார் பேசுகையில், “அமைப்பு சாரா தொழில் துறையில் பணியாற்றுகிறவர்கள், மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் பெறுவதை உறுதி செய்வதில் பிரதமர் மோடி ஆர்வம் கொண்டுள்ளார். தொழிலாளர் துறைக்காக பல்வேறு ஓய்வூதிய திட்டங்களை நாங்கள் அறிமுகம் செய்திருக்கிறோம்” என்று கூறினார்.
    Next Story
    ×