search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுவாதி சிங்
    X
    சுவாதி சிங்

    போலீஸ் அதிகாரியை மிரட்டிய உ.பி. பெண் மந்திரி - விளக்கம் கேட்டு யோகி ஆதித்யாநாத் உத்தரவு

    ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது வழக்குப்பதிய கூடாது என போலீஸ் அதிகாரியை மிரட்டிய உத்தரபிரதேச மாநில பெண் மந்திரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து அந்நிறுவனம் மீது விசாரணை மேற்கொள்ள கண்டோன்மேண்ட் காவல் நிலையம் முற்பட்டது. 

    ஆனால், சரோஜினி நகர் தொகுதியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.வும் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் மந்திரியாக பதவி வகிப்பவருமான சுவாதி சிங், அந்த ரியல் எஸ்ட்டேட் நிறுவனம் மீது எந்த விசாரணையும் செய்யக்கூடாது என லக்னோ கண்டோன்மெண்ட் பகுதி போலீஸ் சர்க்கிள் அதிகாரியை மிரட்டும் ஆடியோ சமீபத்தில் வெளியாகி உத்தரபிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    போலீஸ் அதிகாரியிடம் பேசிய பெண் மந்திரி சுவாதி சிங், ’ரியல் எஸ்ட்டேட் நிறுவனம் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் போலியானது. ஆகையால், இந்த வழக்கு விசாரணையை உடனடியாக நிறுத்தவேண்டும்.

    இது பெரிய இடத்து விவகாரம், இதுகுறித்து முதல் மந்திரியும்  நன்கு அறிவார். ஆகையால், இந்த வழக்கை பதிவு செய்யாமல் என்னுடன் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்’ என அந்த ஆடியோவில் சுவாதி சிங் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்நிலையில், போலீஸ் அதிகாரியை மந்திரி மிரட்டும் ஆடியோ குறித்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யவேண்டுமென டிஜிபி ஒ.பி. சிங்கிற்கு உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்  உத்தரவிட்டுள்ளார். 

    யோகி ஆதித்யநாத்

    இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சியான சமாஜ்வாதி கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’ இது முதல்மந்திரி உள்பட உயரதிகாரிகளுக்கு நன்கு தெரியும். நீங்கள் என்ன விசாரணை நடத்தப்போகிறீர்கள்? போய் உங்கள் இருக்கையில் அமருங்கள்’ இது தான் முதல்மந்திரி கூறும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையா? அசிங்கம்’ என தெரிவித்துள்ளது.

    உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜெய் குமார் லல்லு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'மந்திரி போலீசை மிரட்டி  ஊழல் நிறைந்த ஒரு தனியார் ரியல் எஸ்ட்டேட் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார். மேலும், இது முதல்மந்திரிக்கும் நன்கு தெரியும், வழக்கு பதிவு செய்யக்கூடாது என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

    பாஜக அரசில் ஒரு மந்திரி ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு சட்டத்தின் பாதுகாவலர்களை மிரட்டுவதை பாருங்கள்’ என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×