search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக - காங்கிரஸ்
    X
    பாஜக - காங்கிரஸ்

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது - கேரள அரசுக்கு பா.ஜனதா, காங்கிரஸ் வலியுறுத்தல்

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று கேரள அரசுக்கு பா.ஜனதா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுவதற்கு கேரளாவில் உள்ள அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அரசுத்தரப்பில், கேரள தேவசம் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:-

    தீர்ப்பை விரிவாக ஆராய வேண்டி இருக்கிறது. கடந்த ஆண்டைப் போலவே, இந்த பிரச்சினையை அரசியல் சுயநலத்துக்கு பயன்படுத்த வேண்டாம் என்று அரசியல் கட்சிகளை கேட்டுக்கொள்கிறோம். அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படுவார்களா என்பது பற்றி இப்போது எதுவும் கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சபரிமலை

    சபரிமலை கோவில் தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரு, “7 நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்புவது நம்பிக்கை அளிக்கிறது. பக்தர்களின் நம்பிக்கையை இது அதிகரிக்கும்” என்று கூறினார். மத்திய மந்திரி வி.முரளீதரன், “இது பக்தர்களின் வெற்றி. வழிபாடு தொடர்பான பிரச்சினைகளை சுப்ரீம் கோர்ட்டு புரிந்து கொண்டுள்ளது” என்று கூறினார்.

    மாநில பா.ஜனதா மூத்த தலைவர் கும்மணம் ராஜசேகரன், “சபரிமலை கோவிலுக்குள் கேரள அரசு பெண்களை அனுமதிக்கக்கூடாது. ஒருவேளை, போலீஸ் உதவியுடன் பெண்களை அனுமதிக்க முயற்சித்தால், கடும் விளைவுகள் ஏற்படும்” என்று கூறியுள்ளார். அதுபோல், கேரள எதிர்க்கட்சி தலைவர் (காங்கிரஸ்) ரமேஷ் சென்னிதாலாவும் இதே கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

    7 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கை அனுப்புவதை வரவேற்கிறேன். முந்தைய தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முயற்சிக்கக்கூடாது. பெண்களை போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வருவதோ, அனுமதிப்பதோ கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×