search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரத்பவார்-உத்தவ் தாக்கரே- சோனியா காந்தி
    X
    சரத்பவார்-உத்தவ் தாக்கரே- சோனியா காந்தி

    மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பான 20 நாட்கள்

    மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவு வெளியானது முதல் நேற்று வரை 20 நாட்களாக நடந்த அரசியல் நாடகம் முடிவுக்கு வந்தது.
    மும்பை:

    மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவு வெளியானது முதல் நேற்று வரை 20 நாட்களாக நடந்த அரசியல் நாடகம் முடிவுக்கு வந்தது. அப்போது நடந்த பரபரப்பு திருப்பங்கள் குறித்த விவரம் வருமாறு:-

    அக்.21:- 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. 61.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

    அக்.24:- வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவு வெளியானது. பாரதிய ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 44 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளையும் கைப்பற்றின. மற்ற இடங்களில் சிறிய கட்சிகள், சுயேட்சைகள் வெற்றி பெற்றன.

    அக்.27:- ஆட்சியில் சரி சமமான பங்கும், முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் 2½ ஆண்டுகளுக்கு தருவதாக பா.ஜனதா எழுதி தரவேண்டும் என சிவசேனா அறிவித்தது. இதனால் பாரதிய ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவதில் சிக்கல் ஏற்பட்டது.

    அக்.30:- ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை முடிந்து விரைவில் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். மேலும் அவர் சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவியை விட்டுதர முடியாது என பகிரங்கமாக அறிவித்தார். இதனால் பாரதிய ஜனதா, சிவசேனா இடையே நிலவி வந்த மோதல் மேலும் அதிகரித்தது.

    நவ.4:- மகாராஷ்டிராவில் நிலவி வரும் பிரச்சனை தொடர்பாக தேவேந்திர பட்னாவிஸ் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார். கவர்னரை சந்தித்த சிவசேனா தலைவர்கள், அரசியல் குழப்பத்துக்கு தங்கள் கட்சி காரணம் அல்ல என்று விளக்கம் அளித்தனர்.

    நவ.9:- ஆட்சி அமைக்க விருப்பமா? என்று கேட்டு தனிப்பெரும் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு கவர்னர் கடிதம் அனுப்பினார்.

    நவ.10:- ஆட்சி அமைக்க தங்களிடம் போதிய பெரும்பான்மை இல்லை என பாரதிய ஜனதா பின்வாங்கியது. இதையடுத்து கவர்னர் சிவசேனாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

    நவ.11:- சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார். சோனியா காந்தியை போனில் தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் அந்த கட்சிகள் ஆதரவு கடிதம் கொடுக்கவில்லை. இதையடுத்து 3 நாட்கள் அவகாசம் கேட்ட சிவசேனாவின் கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார். மேலும் அவர் 3-வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரசுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இரவே தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கவர்னரை சந்தித்தனர்.

    நவ.12:- ஆட்சியமைக்கும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் பேசி கொண்டு இருந்த நிலையில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
    Next Story
    ×