search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறந்து கிடந்த பறவைகள்
    X
    இறந்து கிடந்த பறவைகள்

    ராஜஸ்தானில் சோகம்- கொத்து கொத்தாக செத்து மடிந்த வெளிநாட்டுப்பறவைகள்

    ராஜஸ்தானில் உள்ள சாம்பர் ஏரியில் இடம்பெயர்ந்து வந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் செத்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ளது சாம்பர் உப்பு ஏரி. 35.5 கி.மீ நீளம் உடைய இந்த ஏரி இந்தியாவின் மிகப்பெரிய உப்புநீர் ஏரி ஆகும். ஆண்டுதோறும் குளிர்காலங்களில் வெளிநாட்டு பறவைகள் இடம்பெயர்ந்து இங்கு வருவது வழக்கம். சுமார் 10 முதல் 20 வகையான அழகிய பறவைகள் இங்கு வருகை தருகின்றன. சுற்றுலாப்பயணிகளும், அப்பகுதி மக்களும் அழகிய பறவைகளை கண்டு களிப்பது வழக்கம். 

    இந்நிலையில், சாம்பர் ஏரியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப்பறவைகள் நேற்று முன்தினம் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துறை சார்ந்த அதிகாரிகள் பறவைகளின் உடல்களை கைப்பற்றினர்.

    இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘நீரின் மாசுத்தன்மை காரணமாக பறவைகள் இறந்திருக்கக் கூடும். 10 வகையான பறவைகள் என மொத்தம் 1500 பறவைகள் இறந்தன. ஆனால் 5,000 பறவைகள் இறந்திருக்கலாம் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். ஏரியின் நீர் சோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பறவைகளின் உடல்களும் உடற்கூறு ஆய்விற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன’, என தெரிவித்தனர்.

    கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘நீரில் உப்புத்தன்மை அதிகரிப்பதும் பறவைகளின் இறப்பிற்கு ஒரு காரணமாக இருக்கலாம், ஏனெனில் இரத்தத்தில் உப்பு செறிவு அதிகரித்தால் இரத்த ஓட்டத்தின் வேகம் குறைந்து, மூளை போன்ற உள் உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படலாம்’, என கூறினார்.

    1995 ம் ஆண்டு 20 ஆயிரம் எண்ணிக்கையில் வரை வருகைபுரிந்த பறவைகள், இந்த ஏரியின் வறட்சி மற்றும் குறைந்த பருவமழை காரணமாக தற்போது மிகக்குறைந்த அளவே வருகை தருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×