search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவசேனா
    X
    சிவசேனா

    மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சி

    மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து சிவசேனா ஆட்சி அமைக்க மீண்டும் முயற்சித்து வருகிறது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 இடங்களை கொண்ட சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா-105, சிவசேனா-56, தேசிய வாத காங்கிரஸ்-54, காங்கிரஸ்-44 இடங்களில் வெற்றி பெற்றன.

    பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜனதாவும், சிவசேனாவும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா இந்த தடவை முதல்-மந்திரி பதவியை பெற்றுவிட வேண்டும் என்பதற்காக பா.ஜனதாவுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இதனால் பா.ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் புதிய அரசு அமைப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

    இதையடுத்து சிவசேனா தலைவர்கள் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் சோனியாவும், சரத்பவாரும் சிவசேனாவின் திட்டத்துக்கு உடன்படவில்லை. எதிர்கட்சியாக அமர போவதாக அறிவித்தனர்.

    இந்த நிலையில் 105 எம்.எல்.ஏ.க்கள், 10 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை பெற்றுள்ள பா.ஜனதா, சிவசேனா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியானது. அவர்கள் ஆதரவுடன் பட்னாவிஸ் மீண்டும் முதல்-மந்திரி பொறுப்பை ஏற்பார் என்று கூறப்பட்டது.

    ஆனால் நேற்று வரை பா.ஜனதாவை ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைக்கவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று கவர்னரை சந்தித்து பேசிய பட்னாவிஸ் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    அந்த ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக்கொண்டார். புதிய அரசு அமையும் வரை தற்காலிக முதல்-மந்திரியாக பதவியில் இருக்கும்படி பட்னாவிசை அவர் கேட்டுக்கொண்டார்.

    மகாராஷ்டிராவில் புதிய அரசு அமையாததற்கு சிவசேனா கட்சியின் பிடிவாதம் தான் காரணம் என்று பா.ஜனதா தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் சிவசேனா அதை மறுத்துள்ளது. அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்தவ் தாக்கரேவை பொய்யர் என்று வர்ணிப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே பா.ஜனதாவுடன் உடன்பாடு இல்லை” என்று தெரிவித்தது.

    மேலும் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுத்தால் மட்டுமே பா.ஜனதாவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் சிவசேனா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதை ஏற்க மறுத்த பா.ஜனதா ஆட்சி அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்த கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று மறைமுகமாக சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    முதல்-மந்திரி பதவியை தர முடியாது என பா.ஜனதா உறுதியாக அறிவித்து விட்டதால் சிவசேனா தலைவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜனதா ஆட்சி அமைக்க முன் வராததால் அடுத்த 2-வது பெரிய கட்சியான தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கவர்னருக்கு சிவசேனா தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையை கவர்னர் ஏற்பாரா என்று தெரியவில்லை.

    இதற்கிடையே சிவசேனா கட்சி தலைவர்கள் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களிடம் மீண்டும் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். 3 கட்சிகளும் சேர்ந்து புதிய ஆட்சி அமைக்கலாம் என்று சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவத் தொலைபேசி மூலம் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறார். அந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறுவதை பொறுத்துதான் புதிய ஆட்சி அமைவது பற்றி தெரிய வரும்.

    இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாம் என்று காங்கிரஸ் மேலிட தலைவர்களை வலியுறுத்தி வருகிறார்கள். மொத்தமுள்ள 44 எம்.எல்.ஏ.க்களில் 42 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவிக்க முன் வந்துள்ளனர்.

    அதுபோல தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்களும் சிவசேனாவுக்கு ஆதரவாக இருக்க தயாராக உள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. எனவே மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியால் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சிவசேனாவை அழைக்காத பட்சத்தில் குறுகிய காலத்துக்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அவர் பரிந்துரைப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×