search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
    X
    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

    அயோத்தி தீர்ப்பு -உ.பி.யில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆய்வு

    அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இன்று ஆய்வு செய்தார்.

    • அயோத்தியில்  சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பாக வழக்கு
    • நவம்பர் 17-ம் தேதிக்குள் திர்ப்பு வெளியாகவுள்ளது.
    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமஜென்மபூமி, பாபர் மசூதி அமைந்திருந்ததாக கூறப்படுகிற சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது? என்பதில் இன்னும் இறுதி முடிவு வரவில்லை.
     
    இது தொடர்பான வழக்கை விசாரித்து, இந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30-ந் தேதி அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 14 பேர் மேல்முறையீடு செய்தனர். 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மேல்முறையீட்டு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 பேரை கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து 40 நாள் விசாரணை நடத்தி முடித்துள்ளது.

    இந்த வழக்குகளின் விசாரணை கடந்த மாதம் 16-ந் தேதி முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வருகிற 17-ந் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே அதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த தீர்ப்பு, நாடு முழுவதும் பெருத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

    அயோத்தியில் வேலி இடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய நிலம்

    இந்த தீர்ப்பினைத் தொடர்ந்து விரும்பத்தகாத விளைவுகள் நடந்து விடாதபடிக்கு பார்த்துக்கொள்வதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது.

    இந்த நிலையில் உத்தரபிரதேசத்துக்கு, குறிப்பாக அயோத்திக்கு பாதுகாப்பு பணிக்காக 4 ஆயிரம் துணை ராணுவ வீரர்களை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. மேலும் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவான உத்தரவு ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளது.

    அந்த உத்தரவில், பதற்றமான எல்லா இடங்களிலும் போதுமான பாதுகாப்பு படையினரை அமர்த்த வேண்டும். நாட்டில் எங்கும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த தீர்ப்பை எதிர்கொள்வதற்கு நாடு முழுவதும் இவ்வாறு தயாராகி வரும் நிலையில், சர்ச்சைக்குரிய நிலம் அமைந்திருக்கும் உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் கடந்த சில நாட்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. அங்கு ஏற்கனவே 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

    தீர்ப்பு வெளியானதும் அயோத்தியில் எத்தகைய சூழல் நிலவுமோ? என்ற அச்சம் மாவட்டம் முழுவதும் மக்களிடம் நிலவி வருகிறது. இதனால் சர்ச்சைக்குரிய நிலத்தின் அருகே வசித்து வரும் மக்கள், இப்போதே அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேகரிக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.

    இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அம்மாநில அரசின் தலைமை செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி மற்றும் காவல்துறை டி.ஜி.பி. ஓ.பி.சிங் ஆகியோருடன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று ஆய்வு செய்தார்.
    Next Story
    ×