search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    சித்தராமையா
    X
    சித்தராமையா

    எடியூரப்பா ஆடியோ குறித்து ஜனாதிபதியிடம் நேரில் புகார்: சித்தராமையா

    ஆட்சி கவிழ்ப்பில் உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக எடியூரப்பா பேசியதாக வெளியான ஆடியோ குறித்து ஜனாதிபதியிடம் நேரில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம் என்று சித்தராமையா கூறினார்.
    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    உப்பள்ளியில் நடைபெற்ற பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி எடியூரப்பாவின் ஆடியோ வெளியானது. இதில் பேசியுள்ள எடியூரப்பா, ஆபரேஷன் தாமரை மூலம் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து கூட்டணி அரசை கவிழ்த்ததை ஒப்புக்கொண்டுள்ளார். ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கும் தொடர்பு இருப்பதை எடியூரப்பா கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஜனாதிபதியை நேரில் சந்தித்து புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி குதிரை பேரத்தில் ஈடுபட்டு உள்ளனர். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக அவர்கள் செயல்பட்டுள்ளனர் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பான அனைத்து தகவல்களையும் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறுவோம். அரசியல் சாசன பதவியில் இருப்பவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் எப்படி?.

    எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தது, அரசியல் சாசனத்தின் 10-வது அட்டவணையை மீறியது ஆகும். ஜனாதிபதியிடம் முறையிட்டு, முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துவோம். 15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலையொட்டி 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம்.

    மீதமுள்ள 7 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை, தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு அறிவிப்போம். அந்த தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். திப்பு சுல்தான் வரலாற்றை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்குவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள பாடநூல் குழுவின் கூட்டம் இன்று (அதாவது நேற்று) நடைபெறுவதாக தகவல் அறிந்தோம். ஒருவேளை திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கினால், மைசூரு வரலாறு முழுமை அடையாது.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.
    Next Story
    ×