search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படங்கள்
    X
    கோப்பு படங்கள்

    அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு: டெல்லியில் ஆர்.எஸ்.எஸ், முஸ்லிம் தலைவர்கள் ஆலோசனை கூட்டம்

    அயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விரைவில் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் முஸ்லிம் அமைப்பின் தலைவர்களும் இன்று திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி பகுதியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இந்த நிலத்தை சன்னி வக்பு போர்டு, நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

    இது தொடர்பாக முதலில் நீண்ட ஆண்டுகளாக அலகாபாத் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்வது தொடர்பாக உத்தரவிடப்பட்டது.

    ஆனால், அலகாபாத் கோர்ட்டு தீர்ப்பை மூன்று அமைப்புகளும் ஏற்கவில்லை. டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. 14 அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த அப்பீல் மனுக்கள் அனைத்தும் ஒன்றாக விசாரிக்கப்பட்டது. இதற்கிடையே சமரச பேச்சு வார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட்டு மூத்த நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பாளர் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம்பஞ்சு ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    மத்திய மந்திரி தலைமையில் நடைபெற்ற கூட்டம்

    இந்த குழு இந்துக்களையும், முஸ்லிம்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. 4 மாதங்களாக நடந்த சமரச பேச்சுவார்த்தை வெற்றி பெறாமல் தோல்வியில் முடிந்தது.

    அயோத்தி பிரச்சினை மேல்முறையீடு வழக்குகளை விரைந்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது. அதன்படி கடந்த ஆகஸ்டு 6-ம் தேதி முதல் தினசரி இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

    40 நாட்களாக நடைபெற்ற வாதப் பிரதிவாதங்கள் அக்டோபர் 16-ம் தேதியுடன் நிறைவடைந்து, சுப்ரீம் கோர்ட் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணி ஓய்வு பெறவுள்ள நவம்பர் 17-ம் தேதிக்குள் தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து, தீர்ப்பின்போது அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க முன்னேற்பாடாக அயோத்தி நகரம் மற்றும் உத்தர பிரதேசம் மாநிலம் உள்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விரைவில் அளிக்கவுள்ள தீர்ப்பு அனைவராலும் மதிக்கப்பட வேண்டும் என முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி இல்லத்தில் அயோத்தி தீர்ப்பு தொடர்பாக இன்று உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மற்றும் ஷா நவாஸ் உசேன் உள்ளிட்ட பிரபல முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். 

    Next Story
    ×