search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபாநாயகராக கியான் சந்த் குப்தா பதவியேற்ற காட்சி
    X
    சபாநாயகராக கியான் சந்த் குப்தா பதவியேற்ற காட்சி

    அரியானா சபாநாயகராக கியான் சந்த் குப்தா தேர்வு

    அரியானா மாநில சட்டசபையின் புதிய சபாநாயகராக கியான் சந்த் குப்தா இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
    சண்டிகர்:

    90 இடங்களை கொண்ட அரியானா  சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 40 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. காங்கிரஸ் 31 இடங்களை கைப்பற்றியது.

    ஆட்சி அமைப்பதற்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் அந்த எண்ணிக்கையை பாஜகவால் எட்ட இயலவில்லை. தனிப்பெரும் கட்சியாக நீடித்த போதிலும் பாரதிய ஜனதாவால் போதிய இடங்களை பெற இயலாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை உருவானது.
     
    10 இடங்களை கைப்பற்றிய தேவிலாலின் பேரனான துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.

    மனோகர் லால் கத்தார் பதவி ஏற்ற காட்சி

    முதல் மந்திரியாக மீண்டும் மனோகர் லால் கத்தார் பதவியேற்றார். ஆட்சிக்கு ஆதரவு அளித்த துஷ்யந்த் சவுதாலா துணை முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு இடைக்கால சபாநாயகர் ரகுபிர் சிங் கடியன் பதவி பிராமணம் செய்து வைத்தார்.

    இந்நிலையில், அரியானா சட்டசபை சபாநாயகராக கியான் சந்த் குப்தா-வின் பெயரை முதல் மந்திரி மனோகர் லால் கத்தார் இன்று முன்மொழிந்தார். இதை துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா வழிமொழிந்த நிலையில் எதிர்ப்பு ஏதுமின்றி கியான் சந்த் குப்தா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    அரியானா சட்டசபை தேர்தலில் பஞ்சகுலா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட கியான் சந்த் குப்தா தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் முதல் மந்திரி பஜன்லாலின் பேரனுமான சந்தெர் மோகன் பிஷ்னோய் என்பவரை தோற்கடித்து எம்.எல்.ஏ.வானார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×