search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித் ஷா-பட்னாவிஸ் சந்திப்பு
    X
    அமித் ஷா-பட்னாவிஸ் சந்திப்பு

    விரைவில் ஆட்சி அமைப்போம்- அமித் ஷாவை சந்தித்தபின் பட்னாவிஸ் நம்பிக்கை

    டெல்லியில் இன்று பாஜக தலைவர் அமித் ஷாவை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் புதிய அரசை அமைப்போம் என நம்பிக்கை தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தும், ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் 50-50 பார்முலா என்பதில் சிவசேனா உறுதியாக இருக்கிறது. சுழற்சி முறையில் முதல்வர் பதவி தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக ஏற்காததால், தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் ஆகியும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று மதியம் டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது மகாராஷ்டிராவில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தார். 

    மேலும் மகாராஷ்டிர மாநிலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கும்படி கேட்டுக்கொண்டார். மழை பாதிப்பு விவரங்கள் அடங்கிய விரிவான மனுவையும் வழங்கினார்.

    தேவேந்திர பட்னாவிஸ்

    பின்னர் பட்னாவிஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மகாராஷ்டிராவில் விரைவில் புதிய ஆட்சி அமைக்க வேண்டியது அவசியம், விரைவில் புதிய ஆட்சியமைப்போம் என உறுதியாக நம்புகிறேன், என்றார். மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு உதவி செய்வதற்கு மத்திய அரசு உத்தரவாதம் அளித்திருப்பதாகவும் கூறினார்.

    அதன்பின்னர் கட்சியின் பொதுச்செயலாளரும், மகாராஷ்டிர மாநில தேர்தல் பொறுப்பாளருமான பூபேந்திர யாதவையும் பட்னாவிஸ் சந்தித்து பேசினார். 
    Next Story
    ×