search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பனிமூட்டம், காற்று மாசுக்கு மத்தியில் செல்லும் வாகனங்கள்
    X
    பனிமூட்டம், காற்று மாசுக்கு மத்தியில் செல்லும் வாகனங்கள்

    டெல்லியில் வாகன கட்டுப்பாடு அமலுக்கு வந்தது- இன்று ஒற்றைப்படை பதிவெண் வாகனத்திற்கு அனுமதி இல்லை

    டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன கட்டுப்பாடு முறை அமலுக்கு வந்துள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றில் மாசின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் கோதுமை அடித்தாள் எரிக்கப்படுவதாலும், வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து வருகிறது. காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

    அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவெண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் காற்று மாசு ஓரளவு குறைக்கப்பட்டது. 

    இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசம் மற்றும் அரியானாவில் பனிமூட்டத்துடன் கூடிய காற்று மாசு அதிகரித்துள்ளது. 

    இந்நிலையில், காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் டெல்லியில் ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் நவம்பர் 4-ம் தேதி முதல் வாகன இயக்கம் மீண்டும் அமலுக்கு வரும் என முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.

    வாகன கட்டுப்பாட்டு திட்டத்தை மீறியவருக்கு அபராதம் விதிக்கும் போலீஸ்

    அதன்படி ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் வாகன இயக்கம் இன்று அமலுக்கு வந்துள்ளது. வரும் 15-ந் தேதி வரை இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும். 

    இந்த திட்டத்தின்படி நவம்பர் 4, 6, 8, 12 மற்றும் 14 ஆகிய நாட்களில் ஒற்றைப்படை பதிவெண்கள் (1, 3, 5, 7, 9 ஆகிய எண்களில் முடியும் எண்கள்) கொண்ட வாகனங்களை இயக்க அனுமதி கிடையாது. இதேபோல் நவம்பர் 5, 7, 9, 11 மற்றும் 15 ஆகிய நாட்களில் இரட்டைப்படை பதிவெண்கள் (0, 2, 4, 6, 8 ஆகிய எண்களில் முடியும் பதிவெண்கள்) கொண்ட வாகனங்களை இயக்க முடியாது. 

    நான்கு சக்கர வாகனங்கள் அனைத்துக்கும் இந்த ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன கட்டுப்பாடு பொருந்தும். வெளிமாநிலங்களில் இருந்து வரும் நான்கு சக்கர வாகனங்களும் இதனை கடைப்பிடிக்க வேண்டும்.

    இருசக்கர வாகனங்கள் மற்றும் பேட்டரி வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், சிஎன்ஜி வாகனங்களுக்கு விலக்கு இல்லை.

    டெல்லியில் இந்த கட்டுப்பாட்டை வாகன ஓட்டிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அனைத்து சாலைகளிலும் வாகனங்களை கண்காணித்து வருகின்றனர். வாகன கட்டுப்பாட்டை மீறும்  டிரைவர்களிடம் அபராதம் வசூலிக்கின்றனர்.

    டெல்லியில் வாகன கட்டுப்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்துவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×