search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி
    X
    மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி

    எனது தொலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

    தனது தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
    கொல்கத்தா:

    இஸ்ரேல் நிறுவனம் உருவாக்கியுள்ள மென்பொருளை பயன்படுத்தி சில உளவு நிறுவனங்கள் உலகம் முழுவதும் சுமார் 1,400 பேரின் தகவல்களை திருடி இருப்பதாகவும், இந்தியாவில் மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலருடைய வாட்ஸ்-அப் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது

    இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நடைபெற்ற சாத் பூஜை விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-

    இஸ்ரேல் நிறுவனம் உருவாக்கியுள்ள மென்பொருள் மூலம் யாருடைய வாட்ஸ்-அப் தகவல்களையும் திருட முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது தொலைபேசியோ, செல்போனோ அல்லது வாட்ஸ்-அப்போ பாதுகாப்பானதாக இல்லை. யாருடைய தொலைபேசியையும், செல்போனையும் ஒட்டுக்கேட்க முடியும்; வாட்ஸ்-அப் தகவலை திருட முடியும்.

    எனது தொலைபேசி கூட ஒட்டு கேட்கப்படுகிறது. இது மிகவும் தீவிரமான பிரச்சினை என்பதால் இதுபற்றி நாம் எப்படி பேசாமல் இருக்க முடியும்?

    உளவு பார்த்த நிறுவனம் தனிநபர்கள் பற்றிய தகவல்களை அரசுக்கு வழங்கி இருக்கிறது. இது தவறான நடவடிக்கை. தனிநபர் சுதந்திரத்தில் யாரும் குறுக்கிட முடியாது. எனவே இந்த விவகாரத்தில் தலையிட்டு இதுபோன்று நடைபெறாமல் தடுத்து நிறுத்துமாறு பிரதமர் மோடியை நான் கேட்டுக்கொள்ள இருக்கிறேன்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
    Next Story
    ×