search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    டெல்லியில் உள்ள பிரதமர் வீட்டை வேறு இடத்துக்கு மாற்ற திட்டம்

    டெல்லியில் உள்ள பிரதமர் மோடி வீட்டை வேறு இடத்துக்கு மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் போதிய இடவசதி இல்லாமல் இருப்பதுடன் பழங்கால கட்டிடம் என்பதால் பல்வேறு பாதிப்புகளுடன் இருக்கிறது. எனவே பாராளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவது என்ற திட்டம் மத்திய அரசிடம் உள்ளது. இத்துடன் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட்டில் உள்ள ராஜபாதை முழுவதிலும் புதிய கட்டிடங்கள் உருவாக்கி பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கட்டிட வடிவமைப்பு நிறுவனங்களிடம் இருந்து மாதிரி படங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. அதில், அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எச்.சி.பி. டிசைன் என்ற நிறுவனம் புதிய வடிவமைப்பை வழங்கி உள்ளது.

    அதன்படி கட்டிடங்களை கட்டலாமா? என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மத்திய பொதுப்பணித்துறை இதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளது. பிரதமர், மந்திரிகள் மற்றும் உயர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு இதன் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
    பாராளுமன்றம்
    புதிய வரைபடப்படி தற்போது உள்ள பாராளுமன்ற கட்டிடத்தை அப்படியே விட்டுவிட்டு புதிய கட்டிடத்தை அந்த வளாகத்தில் வேறு இடத்தில் கட்டுவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய கட்டிடம் அருங்காட்சியமாக மாற்றப்படும். அதேபோல வடக்கு மற்றும் தெற்கு பக்கத்தில் உள்ள கட்டிடங்கள் எந்த மாற்றமும் செய்யப்படாமல் நீடிக்கப்படும். அதே வளாகத்தில் பாராளுமன்ற செயலகம், அனைத்து வசதிகளுடன் தனியாக கட்டப்படும்.

    தற்போது உள்ள பிரதமர் வீடு, அலுவலகங்களையும் வேறு இடத்திற்கு மாற்ற இந்த வரைபடத்தில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரதமர் வீடு லோக் கல்யாண் மார்க்கில் இருக்கிறது. அதை டல்ஹவுசி சாலையில் ரைசினா ஹில்லுக்கு அருகில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் பிரதமர் வீடு, வீட்டை ஒட்டியே பிரதமர் அலுவலகமும் அமையும்படி கட்டுமான திட்டத்தை வகுத்துள்ளனர். ஆனால் இது சம்பந்தமாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பிறகு தான் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நகர்ப்புற மந்திரி ஹர்தீப்சிங் பூரி கூறினார்.
    Next Story
    ×