search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோதலின்போது எடுத்த படம்
    X
    மோதலின்போது எடுத்த படம்

    போலீசார்-வக்கீல்கள் மோதல் - மத்திய அரசு, டெல்லி கமிஷனருக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

    டெல்லி டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் போலீசார்-வக்கீல்களுக்கு இடையில் நடந்த மோதல் தொடர்பாக இன்று தாமே முன்வந்து விசாரித்த டெல்லி ஐகோர்ட் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் நேற்று வழக்கம்போல் வழக்குகளின் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது போலீசார் குற்றவாளிகளை ஏற்றிவந்த சிறை வாகனத்தின் மீது ஒரு வக்கீலின் கார் மோதியதால் அந்த வக்கீலுக்கும் போலீசாருக்கும் இடையில் நிகழ்ந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

    இதை தொடர்ந்து அந்த வக்கீலை லாக்-அப்புக்கு அழைத்து சென்ற போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. அவரை விடுவிக்க 8 நீதிபதிகள் சென்றனர். ஆனால், போலீசார் விடுவிக்க மறுத்து விட்டனர்.

    அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வக்கீல்கள் சங்கத்தை சேர்ந்த சிலர் தெரிவித்தாலும் இதை போலீசார் மறுத்துள்ளனர்.

    இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நீதிமன்ற வாயிலில் வக்கீல்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் அராஜகத்தை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர். சம்பவ இடத்துக்கு கூடுதலாக போலீஸ் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    கலவரத்தடுப்பு வாகனங்கள் உள்பட ஏராளமான போலீஸ் வாகனங்கள் அங்கு வந்து சேர்ந்தபோது போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் இடையில் பெரிய அளவில் மோதல் வெடித்தது. அப்போது ஒரு போலீஸ் வாகனம் மற்றும் ஒரு கார் தீயிட்டு எரிக்கப்பட்டது.

    மேலும் சில போலீஸ் வாகனங்கள் கல்வீச்சு சம்பவத்தில் சேதமடைந்தன. அந்த பகுதி முழுவதும் சில நிமிடங்களுக்கு போர்க்களம் போல் காட்சியளித்தது. போலீசாரின் தாக்குதலில் காயமடைந்த இரு வக்கீல்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் தரப்பில் சுமார் 10 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    நீதிபதி பிங்கி

    இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து டெல்லிக்கு உட்பட்ட அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் வரும் 4-ம் தேதி (திங்கட்கிழமை) போராட்டம் நடத்தப்படும் என டிஸ் ஹஸாரி வக்கீல்கள் சங்கம் அறிவித்தது.

    டெல்லி ஐகோர்ட் வக்கீல்கள் சங்கம் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தின் தலைமை கூடுதல் அமர்வு நீதிபதி பிங்கி இன்று காலை சம்பவம் நடத்த இடத்தை பார்வையிட்டார்.

    டெல்லி மாவட்ட நீதிபதிகள் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள் டெல்லி போலீஸ் கமிஷனரை அழைத்து இந்த மோதல் சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டனர். இதற்கிடையில், இவ்விவகாரத்தில் தாமே முன்வந்து விசாரிக்கவுள்ளதாக டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி டி.என்.பட்டில் தெரிவித்தார்.

    இதைதொடர்ந்து, இன்று பிற்பகல் ஒரு மணியளவில் விசாரணை தொடங்கியது. இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு, டெல்லி அரசு, டெல்லி போலீஸ் கமிஷனர், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், டெல்லியில் உள்ள அனைத்து மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம், டெல்லி ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதி டி.என்.பட்டில் உத்தரவிட்டார்.

    Next Story
    ×