search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஞ்சய் ரவுட்
    X
    சஞ்சய் ரவுட்

    மகாராஷ்டிரா அரசியல்: எங்களுக்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது - சிவசேனா மிரட்டல்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் மந்திரி பதவி கேட்டுவரும் சிவசேனாவுக்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுட் குறிப்பிட்டுள்ளார்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் 161 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா, சிவசேனா கூட்டணி (105-56) ஆட்சி அமைப்பதில் 10 நாட்களாக இழுபறி நீடித்து வருகிறது.
     
    முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டுகள் சுழற்சி அடிப்படையிலும், மந்திரி பதவிகளை சரிசமமாகவும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை பா.ஜனதா நிராகரித்துவிட்டதால் இந்த இழுபறி தொடர்கிறது.

    இந்தநிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்து வருகிறது. இதுதொடர்பாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் போனில் பேசி ஆலோசனை நடத்தினர்.

    சிவசேனாவின் திட்டம் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நாளை (திங்கட்கிழமை) டெல்லியில் சந்தித்து பேச சரத்பவார் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    காங்கிரசை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. உசேன் தல்வாய் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், “ஜனாதிபதி தேர்தலின்போது காங்கிரஸ் வேட்பாளர்கள் பிரதீபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி ஆகியோரை சிவசேனா ஆதரித்தது. எனவே ஆட்சியமைக்க சிவசேனா ஆதரவு கேட்டு வந்தால், அதை நிச்சயம் ஆதரிக்க வேண்டும். இதன்மூலம் பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து விரட்ட முடியும்” என்று கூறியுள்ளார்.

    சோனியா காந்தி

    ஆனால் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர்களான சுஷில்குமார் ஷிண்டே, சஞ்சய் நிருபம் ஆகியோர் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் நேரடியாக ஆட்சியில் பங்கேற்க கூடாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

    எனவே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிறிய கட்சிகள், சுயேச்சைகள் ஆகியோருடன் இணைந்து காங்கிரஸ் கட்சியின் மறைமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடியுமா? என்பது குறித்தும் சிவசேனா ஆலோசித்து வருகிறது.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுட், எங்களுக்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது, இந்த எண்ணிக்கை 175 ஆகவும் உயரலாம் என்று தெரிவித்துள்ளார்.
     
    Next Story
    ×