search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் சிவன்
    X
    டெல்லி ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் சிவன்

    நிலவின் தென்துருவத்தில் மீண்டும் தரை இறங்க இஸ்ரோ நடவடிக்கை - ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் சிவன் தகவல்

    நிலவின் தென் துருவத்தில் மீண்டும் மெல்ல தரை இறங்க நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பேசிய இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.
    புதுடெல்லி:

    டெல்லி ஐ.ஐ.டி.யின் (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) 50-வது பட்டமளிப்பு விழா, நேற்று நடைபெற்றது. இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் கே. சிவன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரை ஆற்றினார்.

    அப்போது அவர், “நீங்கள் அனைவரும் சந்திரயான்-2 திட்டத்தை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். தொழில்நுட்பத்தை பொறுத்தமட்டில், விக்ரம் லேண்டரை மெல்ல தரை இறங்க வைக்க முடியாமல் போய் விட்டது. ஆனால் மற்றபடி, நிலவின் மேற்பரப்பில் இருந்து 300 மீட்டர் தொலைவுவரை எல்லா அமைப்புகளும் சரியாகத்தான் இயங்கின” என்று கூறினார்.

    மேலும், “எதிர்காலத்தில் நிலவில் மெல்ல தரை இறங்க ஏற்ற வகையில் எல்லாவற்றையும் சரியாக அமைக்க மிகவும் மதிப்புவாய்ந்த தரவுகள் இருக்கின்றன. இஸ்ரோ எதிர்காலத்தில் தனது முழு அனுபவத்தையும், அறிவையும், தொழில்நுட்ப வலிமையையும் இதில் காட்டும் என்ற உறுதியை அளிக்கிறேன்” என்றும் கூறினார்.

    “நிலவின் தென் துருவத்தில் தரை இறங்க மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்படுமா?” என கே.சிவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, “நிச்சயமாக முயற்சிப்போம். சந்திரயான்-2 உடன் கதை முடிந்து விட வில்லை” என குறிப்பிட்டார்.

    கே.சிவன் தொடர்ந்து கூறும்போது எதிர்கால திட்டங்களை பட்டியலிட்டார். அப்போது அவர், “நாங்கள் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கு ‘ஆதித்யா எல் 1’ திட்டம் வைத்திருக்கிறோம். விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தை வைத்துள்ளோம். இனி வரும் மாதங்களில், அதிக எண்ணிக்கையிலான மேம்படுத்தப்பட்ட செயற்கை கோள்களை செலுத்துவதற்கு திட்டமிட்டு வருகிறோம்” என்று கூறினார்.

    மேலும், “சிறிய ரக செயற்கைகோள்களை செலுத்துவதற்கான ராக்கெட்டை முதல்முறையாக டிசம்பர் அல்லது ஜனவரியில் செலுத்த திட்டமிட்டிருக்கிறோம். 200 டன் எடை கொண்ட பகுதியளவு கிரையோ என்ஜின் சோதனையை விரைவில் தொடங்கி விடலாம் என எதிர்பார்க்கிறோம். செல்போன்களுக்கான ‘நேவிகேசன் சிக்னல்’களை (இடத்தை சுட்டிக்காட்டும் சமிக்ஞைகள்) வழங்குவதற்கான பணியை தொடங்க உள்ளோம். இது சமூகத்தின் தேவைகளுக்காக ஏராளமான பயன்பாடுகளை உருவாக்குவதற்கான பாதையைத் திறக்கும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

    முன்னதாக டெல்லி ஐ.ஐ.டி.யில் விண்வெளி தொழில்நுட்ப பிரிவை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கே. சிவன் கையெழுத்து போட்டார்.
    Next Story
    ×