search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா
    X
    பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா

    முன்னாள் ஜனாதிபதியின் தொலைபேசியை ஒட்டுகேட்டது யார்?: சோனியா மீது பாஜக பாய்ச்சல்

    முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி மத்திய மந்திரியாக பதவி வகித்தபோது அவரது தொலைபேசியை ஒட்டுகேட்க உத்தரவிட்டது யார்? என பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.
    புதுடெல்லி:

    பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை உள்பட மோடி தலைமையிலான மத்திய அரசின் நிர்வாக சீர்கேடுகளை மக்களுக்கு விளக்கும் வகையில் வரும் 5-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை நாடு தழுவிய போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் செயல்பாடுகள் தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியில் தற்காலிக தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்றிரவு உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    பல மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், மேலிடப் பார்வையாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியின் அரசை கடுமையாக சாடிப்பேசிய சோனியா காந்தி, நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதைப் பற்றி கவலைப்படாத இந்த அரசு பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக இடம்பெறும் மலிவான யுக்திகளை கையாண்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

    ஆலோசனை கூட்டத்தில் சோனியா காந்தி

    இஸ்ரேல் நாட்டு தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்களின் கைபேசிக்கு வந்த வாட்ஸ்அப் தகவல்களை மத்திய அரசு உளவு பார்த்ததாக சமீபத்தில் வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இதுபோன்ற செயல்கள் சட்டவிரோதமானது, அரசியலமைப்பு சட்டத்துக்கே முரணானது மட்டுமன்றி வெட்கக்கேடானவை என்றும் சோனியா காந்தி கூறினார்.

    இந்நிலையில், அவரது இந்த கருத்துக்கு பதிலடி தந்துள்ள பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா ’ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் பிரனாப் முகர்ஜி மத்திய மந்திரியாக பதவி வகித்தபோது அவரது தொலைபேசியையும் முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கின் தொலைபேசியையும் ஒட்டுகேட்க உத்தரவிட்டது யார்? என்பதை சோனியா காந்தி நாட்டுக்கு விளக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×