search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைப்பதில் இழுபறி

    மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவு வெளியாகி ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில் பாரதிய ஜனதா - சிவசேனா கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலையடுத்து ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிரா, அரியானா ஆகிய இரு மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பாரதிய ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது.

    அரியானாவில் ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணியுடன் பாரதிய ஜனதா அரசு பதவி ஏற்றுள்ளது.

    தேர்தல் முடிவு வெளியாகி ஒருவாரம் ஆகிவிட்ட நிலையிலும் மகாராஷ்டிராவில் இன்னும் ஆட்சி அமைக்கப்படவில்லை. பாரதிய ஜனதா - சிவசேனா கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலையடுத்து ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

    அங்கு மொத்தம் உள்ள 288 இடங்களில் பாரதிய ஜனதா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றியது. பாரதிய ஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன.

    இதனால் கூட்டணி ஆட்சி உடனடியாக அமைந்துவிடும் பா.ஜ.க. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் சிவசேனா கட்சி தொடர்ந்து பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருவதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

    2014 சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டு தேர்தலுக்கு பிறகு கூட்டணி ஆட்சி அமைத்தன. கூட்டணியில் இருந்த நிலையிலேயே மத்திய பாரதிய ஜனதா ஆட்சியை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்து வந்தார்.

    இருந்தபோதிலும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தன. சட்டசபை தேர்தலிலும் அதே கூட்டணி நீடித்தது.

    ஆனால் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கூட்டணியில் இடம்பெறுவதற்கு உத்தவ் தாக்கரே பல நிபந்தனைகளை கூறினார்.

    இதனால் கூட்டணி அமையாமல் போகலாம் என்ற நிலை இருந்தது. கடைசியில் அமித்ஷா நேரடியாக வந்து உத்தவ் தாக்கரேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பிறகு கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது.

    அப்போது இருவரும் என்ன முடிவு எடுத்தார்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அந்த சந்திப்பின் போது இரு கட்சிகளும் சமமாக அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது, முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டு காலம் இரு கட்சிகளும் மாற்றிக்கொள்வது என்று முடிவு செய்ததாக உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

    அதன்படி முதல்-மந்திரி பதவியை 2½ ஆண்டு சிவசேனாவுக்கு தர வேண்டும். சம அளவு மந்திரி பதவிகளை தர வேண்டும் என சிவசேனா வற்புறுத்தி வருகிறது.

    ஆனால் இதை ஏற்க பாரதிய ஜனதா மறுத்து விட்டது. நாங்கள் அப்படி ஒரு வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்று பாரதிய ஜனதா தரப்பில் சொல்கின்றனர். கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக இரு கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நேற்று மும்பையில் நடப்பதாக இருந்தது.

    இரு கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து வராததால் நேற்றைய கூட்டத்தை சிவசேனா ரத்து செய்து விட்டது.

    இன்று பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூடி தங்கள் கட்சி சட்டமன்ற தலைவரை தேர்வு செய்கிறார்கள். இதில் கட்சி தலைவர் அமித்ஷா பங்கேற்பதாக இருந்தது. அவர் பயணத்தை தள்ளிவைத்து விட்டார்.

    இன்றைய கூட்டத்தில் மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர், பாரதிய ஜனதா துணைத்தலைவர் அவினாஷ் ராய் கண்ணா ஆகியோர் பங்கேற்கிறார்கள். இதில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை அமித்ஷாவிடம் வழங்குவது என்று எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர்.

    ஏற்கனவே திட்டப்படி நாளை அமித்ஷாவும், உத்தவ் தாக்கரேவும் பேசுவதாக இருந்தது. அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமித்ஷா வருகிற 1-ந்தேதி அல்லது 2-ந்தேதி மும்பை வர திட்டமிட்டுள்ளார்.

    அதற்குள் சிவசேனாவை சமரசம் செய்துவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் சிவசேனா தங்கள் கோரிக்கையை கைவிட மறுக்கிறது. அமித்ஷாவுடன் நடந்த கூட்டத்தில் 2½ ஆண்டு காலம் முதல்-மந்திரி பதவி, சரிபாதி மந்திரி பதவி தருவதாக உறுதி கூறவில்லை என்று நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

    இதுசம்பந்தமாக நான் அமித்ஷாவிடம் பேசினேன். அவர் அப்படி ஒரு உடன்பாடுக்கு நான் சம்மதிக்கவில்லை என்று என்னிடம் தெரிவித்தார். எனவே முதல்-மந்திரி பதவியை விட்டுத்தர முடியாது. பாதி மந்திரி பதவியும் கொடுக்க முடியாது.

    5 ஆண்டு காலம் நானே முதல்-மந்திரியாக நீடிப்பேன், துணை முதல்-மந்திரி பதவியை சிவசேனாவுக்கு வழங்குவது தொடர்பாக பின்னர் பரிசீலிக்கப்படும் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

    இதற்கிடையே தேவேந்திர பட்னாவிசும் சிவசேனாவுக்கு 50 சதவீத பதவிகளை வழங்குவோம் என கூறிய தகவல் வெளியிடப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் பட்னாவிஸ் அளித்த பேட்டியில் இந்த வார்த்தைகளை அவர் கூறியிருந்தார். அதை சிவசேனா மூத்த தலைவர் ஹர்சால் பிரதான் நேற்று வெளியிட்டார்.

    அதில் பட்னாவிஸ், மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா- சிவசேனா மீண்டும் ஆட்சியை பிடித்தால் பதவி, பொறுப்புகளை சரி சமமாக பகிர்ந்து கொள்வோம் என்று கூறப்பட்டிருந்தது.

    சிவசேனா முரண்டு பிடிப்பதால் பாரதிய ஜனதா என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறது. இதனால் கூட்டணி ஆட்சி அமையுமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதற்கிடையே சிவசேனா கட்சியை உடைத்து எம்.எல்.ஏ.க்கள் பலரை தங்கள் பக்கம் இழுப்பதற்கு பாரதிய ஜனதா ரகசியமாக முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுசம்பந்தமாக பாரதிய ஜனதா எம்.பி. சஞ்சய் காகடே நேற்று கூறும்போது, சிவசேனாவில் உள்ள 56 எம்.எல்.ஏ.க்களில் 45 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. வுடன் கைகோர்த்து புதிய அரசு அமைக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். பா.ஜ.க.வும் சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் அவர்கள் எண்ணம். அவர்கள் உத்தவ் தாக்கரேயின் மனதை மாற்றுவார்கள் என்று கருதுகிறேன் என்று அவர் கூறினார்.

    அதாவது சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பக்கம் இருக்கிறார்கள். எனவே கட்சியை உடைத்து விடுவோம் என்பது போல அவரது கருத்து உள்ளது.

    சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் யாரும் பதவிக்கு ஆசைப்பட்டு தவறான முடிவுகள் எடுத்து விடக்கூடாது என்று சிவசேனா தரப்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் எதிர்க்கட்சியான காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. ஒருவேளை அந்த இரு கட்சிகளும் சிவசேனா ஆட்சி அமைப்பதற்கு வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்ற நிலை நிலவுகிறது. ஆனால் இரு கட்சிகளுமே தாங்கள் எதிர்க்கட்சிகளாக செயல்படப்போவதாக அறிவித்துள்ளன.

    ஆனாலும் பாரதிய ஜனதாவிற்கு இரு கட்சிகளும் பொது எதிரியாக உள்ளன. பாரதிய ஜனதா ஆட்சி அமைவதை தடுப்பதற்கு அந்த கட்சிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

    எனவே சிவசேனா தனித்து ஆட்சி அமைத்தால் அதற்கு இரு கட்சிகளும் ஆதரவு அளிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

    சிவசேனா தலைவர் சஞ்சய் ராத் இதை சூசகமாக ஏற்கனவே தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதாவுடன் ஆட்சி அமைக்காவிட்டால் எங்களுக்கு வேறு வழிகளும் இருக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆதரவை பெற்று தனியாக ஆட்சி அமைக்கலாம் என்ற எண்ணத்தில் தான் அவர் அப்படி கூறியதாக கருதப்படுகிறது.

    இன்னும் ஓரிரு நாளில் இதற்கு சரியான முடிவு எட்டப்படாவிட்டால் பாரதிய ஜனதாவும் அதிரடி முடிவுகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×