search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாவோயிஸ்டு
    X
    மாவோயிஸ்டு

    கடந்த 9 ஆண்டுகளில் மாவோயிஸ்டு தாக்குதலில் 3,749 பேர் பலி - மத்திய அரசு தகவல்

    சத்தீஷ்கார், ஒடிசா உள்ளிட்ட 10 மாநிலங்களில் கடந்த 9 ஆண்டுகளில் நடந்த மாவோயிஸ்டு தாக்குதல்களில் 3,749 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
    புதுடெல்லி:

    சத்தீஷ்கார், ஜார்கண்ட், பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம், மராட்டியம், தெலுங்கானா, ஆந்திரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய 10 மாநிலங்கள் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளாகும். இந்த மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் அடிக்கடி நடத்தி வரும் தாக்குதலில் அதிக உயிர்ப்பலிகள் நிகழ்ந்து வருகின்றன.

    இவ்வாறு கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான 9 ஆண்டு காலத்தில் நடந்த தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகளின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

    2018-19-ம் ஆண்டுக்கான அந்த ஆய்வறிக்கையில், நாட்டின் பல்வேறு இடதுசாரி தீவிரவாத அமைப்புகளில் இந்திய கம்யூனிஸ்டு (மாவோயிஸ்டு) அமைப்பு முக்கியமானதாக விளங்குவதாகவும், நாட்டின் வன்முறை சம்பவங்களில் 88 சதவீதத்துக்கு மேற்பட்ட நிகழ்வுகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு இந்த அமைப்பே காரணம் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    இந்த 10 மாநிலங்களில் கடந்த 2010 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மாவோயிஸ்டுகள் 10,660 தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்தியதாகவும், இதில் 3,749 பேர் கொல்லப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக சத்தீஷ்காரில் மட்டுமே 3,769 தாக்குதல் சம்பவங்களில் 1,370 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக ஜார்கண்டில் 997 பேரும் (3,358 தாக்குதல்), பீகாரில் 387 பேரும் (1,526) மாவோயிஸ்டுகளின் தாக்குதல்களில் இறந்துள்ளனர்.

    அதேநேரம் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான மத்திய அரசின் உறுதியான தேசிய கொள்கை மற்றும் செயல்திட்டத்தால் நாடு முழுவதும் இடதுசாரி தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளது.

    அந்தவகையில் கடந்த 2013-ம் ஆண்டு 1,136 தாக்குதல்கள் நடந்திருக்கும் நிலையில், கடந்த ஆண்டு 833 சம்பவங்களே நிகழ்ந்துள்ளன. மேலும் பலி எண்ணிக்கையும் 397-ல் இருந்து 240 ஆக குறைந்துள்ளது.

    இதைப்போல மத்திய அரசின் வளர்ச்சி கொள்கைகளால் வன்முறை பாதையில் இருந்து விலகி திருந்தி வாழும் மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதாக மத்திய அரசு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
    Next Story
    ×