search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் காற்று மாசு அளவு
    X
    டெல்லியில் காற்று மாசு அளவு

    டெல்லி, நொய்டாவில் தீபாவளிக்கு பிறகு காற்று மாசு மிக மோசமான அளவை எட்டியது

    டெல்லி மற்றும் நொய்டாவில் தீபாவளி நாளில் காற்று மாசு படிப்படியாக உயர்ந்து மிக மோசமான அளவை எட்டியது. இதனால் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் அலர்ஜி ஏற்பட்டது.
    புதுடெல்லி:

    நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் கோதுமை அடித்தாள் எரிக்கப்படுவதாலும், வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து வருகிறது. காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

    அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவெண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் காற்று மாசு ஓரளவு குறைக்கப்பட்டது.

    இந்நிலையில், நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின்போது ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், டெல்லி மற்றும் அருகில் உள்ள நொய்டா நகரில் காற்று மாசு படிப்படியாக உயர்ந்து மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. 

    நேற்று இரவு நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 306, நொய்டாவில் 356 என மிக மோசமான நிலையில் இருந்தது. அரியானா மாநிலம் குருகிராமத்தின் என்ஐஎஸ்இ கவால் பகாரி பகுதியில் காற்றின் தரக் குறியீடு 279 ஆக இருந்தது. இது மோசமான அளவை குறிப்பதாகும். 

    காற்றின் மாசு அதிகரித்ததால் டெல்லியில் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் அலர்ஜி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×