search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மராட்டியம்
    X
    மராட்டியம்

    மராட்டியத்தில் புதிய அரசு அமைவது எப்போது?

    மராட்டியத்தில் முதல்-மந்திரி பதவி கேட்டு சிவசேனா பிடிவாதமாக இருப்பதால், புதிய அரசு அமைப்பதில் இழுபறி தொடர்கிறது.
    மும்பை:

    மராட்டியத்தில் முதல்-மந்திரி பதவி கேட்டு சிவசேனா பிடிவாதமாக இருப்பதால், புதிய அரசு அமைப்பதில் இழுபறி தொடர்கிறது. இந்த நிலையில் வருகிற 30-ந்தேதி பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது.

    288 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க மராட்டிய சட்டசபைக்கு கடந்த 21-ந்தேதி நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆளும் கட்சிகளான பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி வைத்து போட்டியிட்டன.

    இதில் பாரதீய ஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன.

    மற்றொரு அணியில் கூட்டணியாக போட்டியிட்ட காங்கிரஸ் 44 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

    ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 161 இடங்களில் வெற்றி பெற்று இருக்கும் பா.ஜனதா- சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் இணைந்து உடனடியாக கூட்டணி அரசை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிவசேனா ஆட்சியில் சமபங்கு கேட்பதால் இழுபறி நீடித்து வருகிறது.

    கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கூட்டணி ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டதால், பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் இல்லமான ‘மாதோஸ்ரீ’க்கு நேரில் சென்று பேசினர். இதையடுத்து நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஏற்பட்டது. அப்போதே மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்குமான கூட்டணி உடன்பாட்டை அமித்ஷாவுடன் செய்து கொண்டதாக சிவசேனா கூறி வருகிறது.

    அதன்படி, சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் சமபங்கு அளிப்பது பற்றி பேசி முடிவு செய்யப்பட்டதாக சிவசேனா சொல்கிறது.

    சிவசேனா கோரும் ஆட்சியில் சமபங்கு என்பது முதல்-மந்திரி பதவியை சுழற்சி அடிப்படையில் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்வது மற்றும் மந்திரி பதவிகளை சம அளவில் பகிர்ந்து கொள்வது என்று கூறப்படுகிறது.

    இந்த பரபரப்பான நிலையில் நேற்று சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் உத்தவ் தாக்கரேயின் இல்லத்தில் நடந்தது. இதில், ஆட்சியமைக்கும் விவகாரத்தில் முழு அதிகாரத்தை உத்தவ் தாக்கரேக்கு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரேயை முதல்-மந்திரியாக்க வேண்டும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.

    இந்த தேர்தலில் மும்பை ஒர்லி தொகுதியில் போட்டியிட்டு ஆதித்ய தாக்கரே வெற்றி பெற்று உள்ளார். சிவசேனா வரலாற்றில் அதன் நிறுவனர் பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து முதன் முறையாக தேர்தலை சந்தித்தவர் ஆதித்ய தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே அமித்ஷா, தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் முன்னிலையில் பேசப்பட்டதன் அடிப்படையில் ஆட்சியில் சமபங்கு என்ற பார்முலாவை நிறைவேற்றுவது தொடர்பாக பா.ஜனதா எழுத்துப்பூர்வமாக கடிதம் தர வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியதாக சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக் தெரிவித்தார். சிவசேனாவின் இந்த புதிய நிபந்தனை பா.ஜனதாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் நேற்று பா.ஜனதா முன்னாள் மாநில தலைவரும், மத்திய மந்திரியுமான ராவ்சாகேப் தன்வே கூறுகையில், “சிவசேனா கூறி வரும் ஆட்சியில் சமபங்கு கோரிக்கை பற்றி எங்கள் கட்சிக்கு எதுவும் தெரியாது” என்று கைவிரித்தார். ஆட்சி அமைப்பதில் உள்ள பிரச்சினைகள் குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும், உத்தவ் தாக்கரேயும் தீபாவளிக்கு பிறகு ஆலோசனை நடத்துவார்கள் என்றும் அவர் கூறினார். மராட்டியத்தில் 5 நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை வருகிற செவ்வாய்க்கிழமை தான் நிறைவு பெறுகிறது. அதுவரை ஆட்சி அமைப்பது தொடர்பாக இரு கட்சிகளும் திரைமறைவில் காய்நகர்த்தி வந்தாலும், தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு தான் இறுதி முடிவு வெளியாகும் என்று தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் வருகிற 30-ந்தேதி பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுவதாக அந்த கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் சட்டமன்ற தலைவரை தேர்வு செய்வதோடு, ஆட்சியமைப்பதில் முக்கிய முடிவும் எடுக்கப்பட உள்ளது. சிவசேனா பிடிவாதம் காட்டுவதால், ஆட்சியமைக்கும் விவகாரத்தில் சுயேச்சைகள், சிறிய கட்சிகளுடன் தொடர்பில் இருப்பதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. சுயேச்சைகள் 13 இடங்களிலும், பிறகட்சிகள் 16 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது.

    இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்படுவதால், அந்த தருணத்தில் காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்று கூறப்படுகிறது.

    பா.ஜனதாவை அதிகாரத்தில் இருந்து விரட்டுவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரிகள் பிரிதிவிராஜ் சவான், அசோக் சவான் ஆகியோர் ஏற்கனவே கூறியிருந்தனர்.

    இந்த பரபரப்பான நிலையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை மாநில காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் பா.ஜனதாவை ஓரம் கட்டுவதற்காக சிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்தால், அதற்கு ஆதரவு அளிப்பதா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

    ஆனால், இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய சரத்பவார், சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிக்கும் திட்டம் தங்களிடம் இல்லை என்று மறுத்தார். எங்களை எதிர்க்கட்சி வரிசையில் அமருமாறு மக்கள் தீர்ப்பு அளித்து உள்ளனர். மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளோம் என்றும் சரத்பவார் கூறினார்.

    தற்போதைய மராட்டிய சட்டசபையின் பதவி காலம் அடுத்த மாதம் (நவம்பர்) 9-ந்தேதி நிறைவு பெறுகிறது. அதற்குள் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும்.

    புதிய அரசு பதவி ஏற்க கால அவகாசம் இருப்பதால், ஆட்சி அமைக்கும் பிரச்சினை இன்னும் சில நாட்கள் நீடிக்கலாம் என்று தெரிகிறது. 
    Next Story
    ×